நகராட்சி, மாநகராட்சித் தேர்தல் நடத்துவது குறித்து கட்சியினரின் ஆலோசனைகள், குறைகளைக் கேட்பதற்காக கடந்த 10—ஆம் தேதி சென்னையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். முன்னிலையில் இந்தக் கூட்டம் நடந்ததென்றால், அதற்கு முதல் நாள், அதாவது பிப்.09—ஆம் தேதி தஞ்சையில் நடந்த அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் ஏகப்பட்ட சலசலப்புகள் சலங்கை கட்டி ஆடின.
தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம், அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் கும்பகோணம் காஞ்சி சங்கரா மண்டபத்தில் நடந்தது. வடக்கு மாவட்ட கூட்டம் என்றாலும் ஒரு கணக்குடன் வந்திருந்தார் தெற்கு மா.செ.வும் எம்.பி.யுமான வைத்திலிங்கம். முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், ஒ.செ.க்கள், ந.செ.க்கள், நிர்வாகிகள் என மண்டபமே திக்குமுக்காடியது. "என்னடா இது அதிசயமா இருக்கு, துரைக்கண்ணு கூட்டும் கூட்டத்திற்கு இவ்வளவு கூட்டம் வராதே. இன்னைக்கு இவ்வளவு கூட்டம் வந்திருக்குன்னா என்னமோ நடக்கப் போகுது' என ர.ர.க்கள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர்.
தொண்டையைச் செருமிக் கொண்டு வரவேற்புரை நிகழ்த்த வந்தார் கும்பகோணம் ந.செ.வும் மாஜி எம்.எல்.ஏ.வுமான ராமனாதன். அமைச்சர் அவர்களே, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அவர்களே மற்றும் கழகத்தின் நிர்வாகிகளே உங்களையெல்லாம் இருகரம் கூப்பி... என பேசிக்கொண்டிருந்தபோது, நான்கு பேர் நான்கு பேப்பர் பண்டல்களைக் கொண்டு வந்து இறக்கினார்கள். ஆஹா ஆரம்பிச்சுட்டானுங்களா... என கூட்டத்தில் முணுமுணுப்பும் சலசலப்பும் கிளம்பியது.
இதை மேடையில் இருந்து பார்த்த அமைச்சர் துரைக்கண்ணு, "என்னத்த கொண்டாந்து இறக்கியிருக்கானுங்க போய் பாருய்யா'’என தனது உதவியாளருக்கு உத்தரவிட்டார். பதறியடித்து ஓடி வந்து பண்டலைப் பிரித்து ஒரு நோட்டீசை படிக்க ஆரம்பித்தார் உதவியாளர். நோட்டீசில் இருந்த வாசகங்கள் அத்தனையும் அமைச்சருக்கு அர்ச்சனை பண்ணியிருந்தது. உடனே ஒரே ஒரு நோட்டீசை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு, நான்கு பண்டல்களையும் தூக்கிக் கொண்டு போய் யார் கண்ணிலும் கையிலும் சிக்காமல் மறைத்துவிட்டார். அந்த ஒரு நோட்டீசை மட்டும் அமைச்சரிடம் கொடுத்துவிட்டார் உதவியாளர்.
படித்துப் பார்த்த அமைச்சருக்கும் பக்கென்றாகிவிட்டது. "நம்மள நிம்மதியா இருக்கவிடமாட்டானுங்க போலயே' என்ற பீதியுடன், "எல்லாரும் சீக்கிரமா பேசி முடிங்க, அவசரமா நான் சென்னைக்கு கிளம்பணும்'' என பரபரத்தார். கூட்டத்தில் பேசிய முக்கால்வாசிப் பேர், ஜாடைமாடையாக அல்ல நேரடியாகவே அமைச்சரை அட்டாக் பண்ணி பேசி பீதி கிளப்பினார்கள்.
திருவையாறு மாஜி எம்.எல்.ஏ.வும் பூதலூர் ஒ.செ.வுமான ரெத்தினசாமி பேசும்போது, “தஞ்சாவூர் அ.தி.மு.க.ன்னாலே அது வைத்திலிங்கம்தான் என்ற பேரை மாற்ற சிலர் முயற்சிக்கிறார்கள். அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காவே சிலர் இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய கட்சி ஆட்சி இருந்தும் உள்ளாட்சித் தேர்தலில் தோத்துருக்கோம்னா, நம்மோடு இருக்கும் துரோகிகள்தான் காரணம்'' என காரசாரமாகப் பேசி துரைக்கண்ணுவை கிறுகிறுக்க வைத்தார்.
அடுத்து பேச வந்தார் அமைச்சர் துரைக்கண்ணு. “நம்மளோட ஆட்சி நல்ல ஆட்சின்னு மத்திய அரசே சர்டிபிகேட் கொடுத்துருச்சு. இன்னும் 100 வருசம் நம்மளோட ஆட்சிதான்'' என படபடப்புடன் பேசி முடித்தார் அமைச்சர்.
இறுதியாக மைக் பிடித்த மாஜி வைத்திலிங்கம், "கட்சியில் இருக்கும் அத்தனைபேரும் மனசாட்சியுடன் செயல்படவேண்டும். சொல்றது ஒண்ணு செய்றது ஒண்ணுன்னு இருக்கக்கூடாது. எதிரிகளை ஜெயித்துவிடலாம், ஆனால் நம்முடன் இருக்கும் துரோகிகளை ஜெயிக்க முடியாது. எதிரி நேரடியாக தாக்குவான், துரோகி பின்பக்கமாக தாக்குவான்'' என வார்த்தைக்கு வார்த்தை "துரோகி' எனச் சொல்லி மைக்கையே மயக்கமடைய வைத்தார்.
"ஏன் இந்த களேபரம், எதற்கு இந்த துரோக வெறி?'' என தஞ்சை நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். "மைக்கைப் பார்த்தா போதும் அமைச்சர்கள் எல்லோரும் வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டி கட்சியின் இமேஜை டேமேஜ் பண்ணிக்கிட்டிருக்காங்க. அவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டும் பெருகுது. இந்த வகையில் துரைக்கண்ணு நாலாவது இருக்கார். இது போக அமைச்சரின் மூத்த மகன் பாண்டியன், அக்ரி டிபார்ட்மெண்டில் புகுந்து விளையாடுகிறார், இரண்டாவது மகன் ஐயப்பன் மற்ற டீலிங்குகளையும், மகள் சந்தியா -மருமகன் சபரீசன் ஆகியோர் கட்சிக்குள் அக்கப்போர் பண்ணிவருகிறார்கள்.
தனது சமூகத்தைச் சேர்ந்த முருகன் கஃபே முருகானந்தம், அம்மா பேரவை து.செ.செந்தில், திருவிடைமருதூர் அசோக்குமார், திருவலஞ்சுழி சுபா அறிவழகன் ஆகியோரின் வளர்ச்சிக்குப் பாடுபடும் அமைச்சரால் மற்ற சமூகத்தினர் ரொம்பவே நொந்துகிடக்கிறார்கள். காண்ட்ராக்ட் வேலைகளைக் கூட தி.மு.க.வில் இருக்கும் தனது சமூகத்தின் முக்கியப் புள்ளி ஒருவருக்குத்தான் கொடுக்கிறார்'' என புலம்பித் தள்ளினார்.
நாம் அமைச்சரைத் தொடர்பு கொண்டபோது, "எனக்கு எதிரா நோட்டீசா, அப்படியா? கூட்டம் நல்லபடியா முடிஞ்சுது'' என்றார் சிம்பிளாக.