
தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கடந்த ஜனவரி மாதம் 26- ஆம் தேதி, குடியரசு நாளன்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுத்து, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட “அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு” தொடங்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினை வெளியிட்டார்.
அதன்படி, சோனியா காந்தி முதல் அதிமுகவின் ஓ. பன்னீர்செல்வம் வரை இந்தியாவின் முக்கிய கட்சி தலைவர்களுக்கு 02/02/2022 கடிதம் வாயிலாக, இக்கூட்டமைப்பில் இணையுமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.
சமூகநீதி கூட்டமைப்பில் இணைய விருப்பம் இல்லை என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில், 'அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள சமூக நீதி கூட்டமைப்பில் அதிமுக இணைய விரும்பவில்லை. ஓர் அமைப்பை தொடங்குவதற்கு முன் ஒத்த கருத்து கொண்டவர்களை அழைத்துப் பேசி விவாதிக்க வேண்டும். விவாதிக்காமல் அமைப்பை ஏற்படுத்தி விட்டு பிரதிநிதியை நியமிக்க கூறுவது கூட்டாட்சி தத்துவத்தின் கூற்றுக்கு முரணாக உள்ளது. தங்களின் கடிதத்தை துருவித்துருவிப் பார்த்தபோது தமிழக மக்களின் நலன் எதுவுமில்லை. நேரத்தை வீணடிப்பதை விட்டு நீட் போன்ற மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துங்கள்'' என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிமுகவின் இந்த முடிவு குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் அதிமுக இணையாமல் இருப்பது அவர்களுடைய விருப்பம். சமூகநீதியில் அனைவரையும் அரவணைத்துச் செல்வதற்காகவே தமிழக முதல்வர் அதிமுகவையும் அழைத்தார். நீட் விலக்கில் கவனம் செலுத்தக் கூறும் ஓபிஎஸ் நீட் தொடர்பான கூட்டத்திற்கு வராது ஊருக்கு உபதேசம் செய்வது போல் உள்ளது. பாஜகவிற்கு பல்லக்கு தூக்குவது என ஓபிஎஸ் இருப்பதையே அவரது அறிக்கை உணர்த்துகிறது'' என தெரிவித்துள்ளார்.