தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும், அரசியல் கட்சித் தொடங்குவதற்கான அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் வெளியிடாமல் இருக்கிறார்.
மார்ச் 05ந்தேதி சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடக்கவிருக்கும் ரஜினி மக்கள் மன்ற மா.செ.க்கள் கூட்டத்தில் இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும், மா.செ.க்களில் அதிரடி மாற்றங்கள் நிகழப் போவதாகவும் மக்கள் மன்றத்தின் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் ரஜினி மக்கள் மன்ற அமைப்பாளராக இருப்பவர் முருகு பாண்டியன். அமெரிக்காவில் இருக்கும் இவர் இப்போதுவரை இந்தியா வரவில்லை. மா.செ.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்த நிலையில், தன் சார்பில் வேறு ஒருவரை அனுப்பி வைப்பதாக அவர் கூறுகிறாராம். இந்த முருகு பாண்டியனின் சகோதரரான கே.கே.செல்லப்பாண்டியன் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுகவின் பொறுப்பாளராக இருக்கிறார். இன்னொரு சகோதரர் அன்புச்செல்வன் மு.க.அழகிரியின் ஆதரவாளராக இருக்கிறார். மு.க.அழகிரி கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தபோது, அவரோடு உடனிருந்து செயல்பட்டவர்தான் இந்த அன்புச்செல்வன்.
இப்படி முழுக்க முழுக்க திமுக பின்புலம் கொண்டவரான முருகுபாண்டியன், வரமுடியாத சூழலை ரஜினி மக்கள் மன்ற மேல்மட்ட பொறுப்பாளர் சுதாகருக்கு தெரியப்படுத்தி இருக்கிறார். அவருக்குப் பதிலாக வரப்போகும் நபரை கூட்டத்திற்குள் அனுமதிக்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் சுதாகர் இருப்பதாக தகவல் வருகிறது.