அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் எழுந்து, அதனைத் தொடர்ந்து பொதுக்குழுக் கூட்டமும் நடைபெற்று முடிந்த நிலையில், ஓபிஎஸ்-இபிஎஸ் பிளவு காரணமாக அது தொடர்பான சிக்கல்கள் தற்பொழுது வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.
டெல்லி சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று தமிழகம் வந்திருந்த நிலையில், அவருக்கு பல்வேறு இடங்களில் தொண்டர்கள் வரவேற்பளித்தனர். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஓபிஎஸ்-இபிஎஸ் பெயர் இல்லாமல் தலைமை நிலையச் செயலாளர் எனக் குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'அதிமுக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நாளை காலை 10 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட, திட்ட விதி 20 ஏ-இன் கீழ் கழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாக பொறுப்புகள் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது. அதன்படி இருவரின் ஒப்புதலைப் பெற்று தான் எவ்விதமான கூட்டமும் கூட்டப்பட வேண்டும். ஆனால் இருவருடைய ஒப்புதல் இன்றி, கையொப்பம் இல்லாமல் கழக தலைமை நிலையச் செயலாளர், தலைமை கழகம் என்ற பெயரில் கழக சட்ட, திட்ட விதிக்கு எதிராக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. எனவே இக்கூட்டம் செல்லாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.