தமிழக அரசியலில் நிலவும் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்று மு.க.அழகிரி, போற போக்கில் ஒருபரபரப்பை ஏற்படுத்தி விட்டார். கலைஞர் இறந்த சமயம், தமிழகத்தில் நல்ல தலைவர்களுக்கு வெற்றிடம் ஏற்பட்டிருக்கு என்று முதலில் பேசியவர் ரஜினி தான். அதற்கு கலைஞர் பிறந்தநாள் விழாவிலேயே, பதில் கொடுத்த மு.க.ஸ்டாலின், கலைஞரின் வெற்றிடத்தை நிரப்ப நான் இருக்கேன் என்று அழுத்தம் திருத்தமாக கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய அளவில் வெற்றியும் பெற்றது. ஆனாலும் ரஜினி, அண்மையில் தன் போயஸ் தோட்ட வீட்டில் நிருபர்களிடம் பேசியபோதும், இன்னும் அந்த வெற்றிடம் நிரப்பப்படாமலேயே இருக்கு என்று அதே கருத்தை ரிபீட் செய்தார்.
அப்படி எந்த வெற்றிடமும் இல்லை என்று அவருக்கு முதல்வர் எடப்பாடி உள்ளிட்டோர் பதில் சொன்ன நிலையில்தான், 13-ந் தேதி சென்னை ஏர்போர்ட்டில் நிருபர்களின் பார்வையில் சிக்கிய மு.க.அழகிரி, அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்று கூறினார். அதே நேரத்தில், ரஜினி கட்சி ஆரம்பித்தால் நீங்க சேருவீர்களான்னு கேள்வி கேட்டதுக்கு அழகிரி எந்த பதிலும் கூறவில்லை. ரஜினியைப் பொறுத்தவரை, புதிய அரசியல் கட்சியைத் தொடங்கும் முடிவை தள்ளி வைத்து கொண்டே செல்கிறார். காரணம், அவரைக் குறிவைக்கும் பா.ஜ.க.தான் அவரைப் புதுக்கட்சியைத் தொடங்காமல், தங்கள் கட்சியில் எப்படியாவது இணைய வேண்டும் என்று நிர்பந்தங்களைக் கொடுத்து அவரைக் குழப்பி வருவதாக சொல்கின்றனர்.