தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரும் மாற்றப்படவிருக்கிறார்கள். தமிழக டிஜிபியாக இருக்கும் திரிபாதி நடப்பு மாதத்தோடு ஓய்வு பெறுகிறார். இதனால் புதிய டி.ஜி.பி.யார் ? என்கிற விவாதம் ஐ.பி.எஸ். அதிகாரிகளிடத்தில் எதிரொலிக்கிறது. இது குறித்து ஐ.பி.எஸ். அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, “டி.ஜி.பி. அந்தஸ்தில் 1987 ஆம் வருட பேட்ஜில் சைலேந்திரபாபு, கரன்சின்கா, பிரதீப் பிலிப் , 1988 ஆம் வருட பேட்ஜில் சஞ்சய் அரோரா, சுனில்குமார்சிங், 1989 ஆம் வருட பேட்ஜில் கந்தசாமி, ஷகில் அக்தர், ராஜேஷ்தாஸ், பி.கே.ரவி ஆகியோர் இருக்கின்றனர். இவர்களில் பாலியல் குற்றச்சாட்டுகளில் ராஜேஷ்தாஸ் சிக்கி அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
இந்த 9 அதிகாரிகளின் பட்டியல் மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்களில் சீனியாரிட்டிபடி மூன்று பேரை தேர்வு செய்து தமிழக அரசிடம் தேர்வாணையம் ஒப்படைக்கும். அவர்களில் ஒருவரை ஸ்டாலின் தேர்வு செய்வார்” என்கின்றனர். மேலும், தமிழக அரசின் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் டிஜிபியாக அதாவது தமிழக காவல்துறையின் தலைவராக நியமிக்கப்படுபவர் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரியாக இருக்க வேண்டும், வட இந்திய அதிகாரிகளுக்கு வாய்ப்பு தந்து விடாதீர்கள் என இப்போதே ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலர், பல ரூட்டுகளில் ஸ்டாலினுக்கு தகவல அனுப்பி வைத்துள்ளனர். அதேசமயம், திமுக ஆட்சியில் எப்போதும் சட்டம் ஒழுங்கு குறித்து விமர்சனங்கள் வைக்கப்படும் என்பதால், தமிழக அதிகாரியாக இருந்தாலும் சரி, வட இந்திய அதிகாரியாக இருந்தாலும் சரி இதுவரை பாலியல் குற்றச்சாட்டுகள், ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத நேர்மையான அதிகாரியை நியமியுங்கள் என வேண்டுக்கொள் வைத்து வருகின்றனர்.
மேலும் அதுதான் உங்கள் ஆட்சிக்கு நல்லப்பெயரை பெற்றுத் தரும் என்று ஓய்வு பெற்ற அதிகாரிகள் சிலர் ஸ்டாலினுக்கு தகவல் அனுப்பி வைத்தபடி இருக்கின்றனர். அதேபோல, அதிமுக ஆட்சியில் அமைச்சர்களுக்கு பொட்டித் தூக்கி சேவகம் செய்து வந்த அதிகாரிகளும் மீண்டும் நல்ல பதவியை கைப்பற்ற திமுகவின் சித்தரஞ்சன் சாலையை நெருங்கி வருகிறார்கள். அதற்காக தூதுவிட்டு கொண்டும் இருக்கின்றனர். அதனால், ‘உயரதிகாரிகள் நியமணத்தில் ஸ்டாலின் கவனமாக இருக்க வேண்டும்’ என்று விவரிக்கின்றனர்.