திமுக அரசைக் கண்டித்து தஞ்சை தெற்கு மாவட்ட அமமுக சார்பில் ஒரத்தநாட்டில் கண்டனப் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “சுயநலவாதிகள் கைகளில் மாட்டியுள்ள ஜெயலலிதாவின் இயக்கத்தை மீட்க அமமுகவுடன் ஓபிஎஸ், வைத்திலிங்கம் போன்றோர் கைகோர்த்துள்ளார்கள். இது இயற்கையாக ஏற்பட்டது. தேவைக்காக ஏற்பட்டது அல்ல. நாம் பிரிந்து இருந்தால் திமுகவை வீழ்த்த முடியாது என்ற காரணத்தால், திமுக ஆட்சியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைக்கிறதே, அதை தட்டி கேட்கவும் இணைந்துள்ள ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் நாம்.
டெல்டா மாவட்டங்கள், மதுரை, தெற்கு மாவட்டங்களில் இவர்கள் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார்கள் என்று ஒரு சிலர் சொல்கிறார்கள். உண்மையில் இந்த இணைப்பு தமிழ்நாடு முழுவதும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தலைமைப் பதவியை ஒரு சிலர் கபளீகரம் செய்துவிட்டார்கள். அவர்களிடம் இருந்து அதை மீட்கத்தான் நானும் ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்துள்ளோம். ஜாதி மத வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். இதன் வெளிப்பாடு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் எதிரொலிக்கும்” எனக் கூறினார்.