தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 25 ஆம் தேதி (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது.
இதனையடுத்து தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “திமுகவா, பாஜகவா என்பதுதான் சவால். திமுக தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. பாஜக மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. போட்டி திமுக - பாஜக என இருவருக்கும்தான். இதனை நான் கடந்த 2 ஆண்டுகளாக கூறி வருகிறேன்” எனப் பேசி இருந்தார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இது குறித்துப் பேசுகையில், “அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி. பாஜகவுடன் கூட்டணி குறித்த அதிமுகவின் நிலைப்பாட்டை கடந்த 25 ஆம் தேதியே அறிவித்துள்ளோம். 2.5 கோடி அதிமுக தொண்டர்களின் முடிவை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பிரதிபலித்துள்ளோம். தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்கவும், தமிழகம் வளர்ச்சி பெறவும், சிறுபான்மையினர் நலன் காக்க வேண்டும். இதுதான் அதிமுக பிரதான கோரிக்கை. யார் ஆட்சிக்கு வந்தாலும் இதனை முன்னிறுத்துவோம். தமிழ்நாட்டு மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும். டிடிவி தினகரனை நாங்கள் பொருட்படுத்துவதே இல்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் டிடிவி தினகரனின் அமமுக காணாமல் போய்விடும்.” எனத் தெரிவித்தார்.