புதியதாக அறிவிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. www.tnsec.tn.nic.in என்ற மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் தங்கள் பெயர், வார்டு உள்ளிட்ட விவரங்களை அந்த இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னை அடையாறில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, ''டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு முயன்றுவருகிறது. ஓரிரு மாதங்கள் கூடலாம் அல்லது குறையலாம்" எனத் தெரிவித்திருந்தார்.
அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக தலைமை இன்று மாலை அறிவித்திருந்தது. இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.