பாஜக பிரமுகர் கே.டி. ராகவனின் தனிப்பட்ட வீடியோ சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கே.டி.ராகவனின் வீடியோப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது, “அவருடைய ஒப்புதல் இல்லை, அவருடைய அனுமதியும் இல்லை! அவருக்கேத் தெரியாமல் அவருடைய வீட்டின் படுக்கையறையிலும் கழிவறையிலும் கேமராவை வைத்து வீடியோ எடுத்துவிட்டு வருவதுதான் முதலில் சமூக குற்றம்! அதைச் செய்து வெளியிட்டவரைத் தான் முதலில் கைது செய்திருக்க வேண்டும். இந்த உலகத்திலேயே எங்கும் நடக்காத ஒன்றை இவர் செய்துவிட்டார் என்பது போல காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சீமானின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், பாஜக கே.டி.ராகவனின் மீதான குற்றத்திற்கு ஆதரவாக சீமான் பேசியது அதிர்ச்சியளிக்கிறது. இதனால் பாஜகவின் 'பி'- டீம் என்பதை சீமான் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்' என்று தெரிவித்துள்ளார். பாஜக கே.டி.ராகவன் தொடர்பான வீடியோ வெளியாகிய அன்றே ஜோதிமணி டிஜிபி அலுவலகத்தில் ராகவன் மீது புகார் அளித்திருந்தார். பெண்ணிடம் ஆபாசமாக நடந்துகொண்டதாகவும், இதுகுறித்து விசாரித்து காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்த புகாரில் ஜோதிமணி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.