அதிமுக தனது மூன்று ராஜ்யசபா சீட்டுகளில் ஒன்றை, தமாகா வாசனுக்கு ஒதுக்கியதில், வாசன் மகிழ்ந்தாலும், அவர் கட்சியில் இருக்கும் சீனியர்கள், அதை ரசிக்காமல் கடும் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து அவர்களிடம் கேட்டபோது, 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தியபோது, ஜெ.,த.மா.கா.வுக்கு 5 சீட்டுகளை ஒதுக்க முன்வந்தார். அப்போது அவர் வைத்த நிபந்தனை இரட்டை இலைச் சின்னத்தில் நிற்கவேண்டும் என்பதுதான்.
ஆனால் வாசனோ, தனித்தன்மை இல்லாமல் போய் விடும் என்று சொல்லி அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். அன்று கட்சிக் காரர்கள் 5 பேருக்குக் கிடைத்திருக்க வேண்டிய எம்.எல்.ஏ. பதவியை அலட்சியமாக அணுகி, தூக்கியெறிந்த வாசன், இப்போது தனக்குப் பதவி என்றதும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அ.தி.மு.க. ஓட்டின் மூலம் ராஜ்யசபாவுக்குப் போகிறார் என்று ஆதங்கமாகச் சொல்கின்றனர் சீனியர்கள்.