தமிழக, கேரள அரசுகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் எழுப்பியுள்ள கேள்வி:
’’தமிழ்நாடு எல்லையில் அமைந்த கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள சித்தூர் தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணகுட்டி. ஆளும் இடது முன்னணியின் கூட்டணிக் கட்சியான ஜனதா தளத்தைச் சேர்ந்தவர். இவர் தமது அடியாட்களை ஏவி தமிழர்களுக்கெதிராக தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டுவருகிறார்.
தமிழர்களின் அடிப்படை வாழ்வாதார விடயங்களை முடக்கி பாதிப்புகளை ஏற்படுத்துவதையே தனது நோக்கமாகக் கொண்டிருக்கிறார். மூலத்தரா அணையிலிருந்து தமிழ் விவசாயிகளுக்கு மட்டும் தண்ணீர் கிடைக்காதபடி செய்துவருகிறார்.
இப்போது கற்பனையான, பொய்யான ஒரு குற்றச்சாட்டை உருவாக்கி அதை வைத்து தமிழர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்திருக்கிறார். அதாவது பரம்பிகுளம்-ஆழியாறு திட்ட ஒப்பந்தப்படியான நீரை கேரளாவுக்கு தமிழகம் தருவதில்லை என்று பொய் கூறி தனது ஆதரவாளர்களை தமிழர்களுக்கெதிராகத் தூண்டிவிட்டிருக்கிறார்.
உண்மை அறியாத நிலையில் அவர்களும் தமிழர்களுக்கெதிராக வன்முறைச் செயல்களில் ஈடுபடுகின்றனர். ஒப்பந்தப்படியான 7.5 டிஎம்சி நீரை தடையின்றி கேரளாவுக்குத் தந்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு. அணையில் தண்ணீர் இல்லாத சமயத்தில் அடுத்த முறை நீரைச் சேர்த்து வழங்கிவிடுவது வழக்கம்; இது ஒப்பந்தப்படியான நடைமுறையும்கூட.
ஆனால் தண்ணீர் இல்லாத இந்த தருணத்தில் பார்த்து, தண்ணீர் தரவில்லை என்பதாகச் சொல்லி, தனது அடியாட்களைக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார் கிருஷ்ணகுட்டி.
நேற்று நள்ளிரவு முதல் தமிழக வாகனங்கள் எதுவும் கேரளாவுக்குள் நுழையக் கூடாது என்று சொல்லி அவற்றைத் தாக்கித் தடுத்து நிறுத்தியிருக்கிறார்.
தமிழக-கேரள எல்லை ஊர்களான கோபாலபுரம், மீனாட்சிபுரம் சாலையில் கிருஷ்ணகுட்டியின் அடியாட்கள் தமிழக வாகனங்களை மறித்துத் தாக்கி, அதற்கு மேல் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். அங்கிருந்து பொள்ளாச்சி வரைக்கும் போக்குவரத்து ஸ்தம்பித்து வாகனங்கள் அப்படியே நகர முடியாமல் நின்றுகொண்டிருக்கின்றன.
கிருஷ்ணகுட்டி இப்படிச் செய்திருப்பதற்கு முழுக்க முழுக்க அவரது உள்நோக்கமே காரணம். நீண்ட நாட்களாக இவர் அமைச்சர் பதவி கோரி வருகிறார். அதற்கான செல்வாக்கு தனக்கு இருப்பதாக காட்டிக்கொள்ளவே இந்த இனவெறிச் செயலில் இறங்கியிருக்கிறார் அவர்.
இப்படி தமிழக வாகனங்களைத் தடுத்து நிறுத்தி இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பினை ஏற்படுத்தியதைக் கண்டித்தும், வாகனங்களைச் செல்லவிடுமாறும் தமிழ்நாடு திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் கா.சு.நாகராஜன் தலைமையில் அறவழியில் போராட்டம் நடத்தினர்.
அந்தப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தோழர்களும் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 12 பேரை மட்டும் கைது செய்தது காவல்துறை.
சுயநல நோக்கில் அமைச்சர் பதவிக்காக திட்டமிட்டு தமிழர்களுக்கெதிராக வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டிருப்பது இரு மாநில மக்களுக்கிடையிலான நல்லுறவுக்கே ஊறு விளைவிப்பதாகும். இதற்கு காரணமான கிருஷ்ணகுட்டி, மக்கள் பிரதிநிதி என்கின்ற எம்எல்ஏ பதவி வகிக்கவே தகுதியற்றவராவார். இவரது பொறுப்பற்ற செயலால் அசம்பாவிதங்கள் மற்றும் விபரீதங்கள் ஏற்படுமுன் அவர் மீது கேரள அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசும் ஆவன செய்ய வேண்டும். முதல் வேலையாக கிருஷ்ணகுட்டியின் இனவெறியாட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்துத் தடையை அகற்ற வேண்டும்.
கிருஷ்ணகுட்டியின் இனவாத வெறியாட்டத்தைக் கண்டித்ததற்காக கைது செய்த தமிழ்நாடு திராவிடர் கழகம் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தோழர்களை உடனே விடுவிக்க வேண்டும்.
கிருஷ்ணகுட்டியின் இனவெறியாட்டத் தாக்குதலால் சேதமுற்ற வாகனங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இத்தனையும் செய்வதோடு, இந்த இனவெறிச்செயல் இனியும் தொடராதபடி உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழக, கேரள அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.’’