நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
அதே வேளையில், பல்வேறு கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதே சமயத்தில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டது. அதில், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அரசியல் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தமிழக பா.ஜ.கவில் மாநில அளவிலான குழு ஒன்றை அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில்,‘மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோர் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த மாநில அளவிலான அமைக்கப்பட்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.