Skip to main content

சட்டமன்ற உறுப்பினர்கள் நியமன வழக்கு; உயர்நீதிமன்ற பதிவாளருக்குக் கடிதம்!

Published on 31/05/2021 | Edited on 31/05/2021

 

Nomination case of nominating legislators; Letter to the Registrar of the High Court!

 

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பா.ஜ.கவை சேர்ந்த கே.வெங்கடேசன், ராமலிங்கம், அசோக் பாபு ஆகிய 3 பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்தது. புதுச்சேரி அரசு மற்றும் அமைச்சரவை ஒப்புதல் இன்றி அறிவிக்கப்பட்ட இந்த நியமனம், புதுச்சேரி அரசியலில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

 

இந்த நியமனத்தை எதிர்த்து கரிக்கலாம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், கிராமப்புற மக்கள் வாழ்வாதார இயக்க தலைவருமான கோ.அ. ஜெகன்நாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 20.05.2021 அன்று விடுமுறைக் கால அமர்வு நீதிபதிகள் டாக்டர் அனிதா சுமந்த், செந்தில்குமார் இராமமூர்த்தி ஆகியோர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 

 

அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் மு.ஞானசேகர், மத்திய அரசு, புதுச்சேரி அரசு, நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பு வழங்க, வழக்கைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். அதேசமயம் கடந்த 24.05.2021 அன்று தற்காலிக சட்டப்பேரவை தலைவர் லட்சுமி நாராயணன்  மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

 

இந்நிலையில், நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனத் தொடுக்கப்பட்ட வழக்கை உடனடியாக மீண்டும் விசாரிக்க வேண்டும் என ஜெகன்நாதன் உயர்நீதிமன்ற பதிவாளருக்குக் கடிதம் அனுப்பி உள்ளார்.  

 

Nomination case of nominating legislators; Letter to the Registrar of the High Court!

 

கோ.அ.ஜெகன்நாதன் அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில், "புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பா.ஜ.கவை சேர்ந்த கே.வெங்கடேசன், ராமலிங்கம், அசோக் பாபு ஆகிய 3 பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக மத்திய உள்துறை அமைச்சகம்  நியமித்தது. புதுச்சேரி அரசு மற்றும் அமைச்சரவை ஒப்புதல் இன்றி அறிவிக்கப்பட்ட இந்த நியமனம், அரசியலமைப்புக்கு எதிரானது . எனவே மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் நியமனத்தை ரத்து செய்யவும், அவர்கள் செயல்படத் தடை விதிக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தேன்.  இவ்வழக்கு கடந்த 20.05.2021 அன்று விடுமுறைக் கால அமர்வு நீதிபதிகள் டாக்டர் அனிதா சுமந்த், செந்தில்குமார் இராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. 

 

அப்போது மனுதாரராகிய எனது சார்பில் மூத்த வழக்கறிஞர் மு.ஞானசேகர், எதிர் மனுதாரரான மத்திய அரசு, புதுச்சேரி அரசு, நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பு வழங்க, வழக்கை நாள் குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இந்நிலையில், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக திரு.க.இலட்சுமிநாராயணன் பதவி ஏற்பார் எனவும், அவர் நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட  தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்றும் செய்தி வெளியானது. 

 

இந்நிலையில், கடந்த 24.05.2021 அன்று தற்காலிக சட்டப்பேரவை தலைவருக்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்று கூறி கடிதம் எழுதினேன். 

 

ஆனால், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். இது உயர்நீதிமன்ற வழக்கின் தீர்ப்பைப் பாதிக்கும் என்பதோடு, வழக்கு விசாரணைக்குக் குந்தகம் விளைவிக்கும் செயலாகும். மேலும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இவ்வழக்கில் வக்காலத்தும், எழுத்து மூலம் பதிலுரையும் தாக்கல் செய்யாமல் வாதிட்டுள்ளார். இது நீதிமன்ற விதிகளுக்கு முரணானது என்பதோடு, நீதிமன்றத்தில் ஏற்புடைய நடைமுறையும் அல்ல.

 

எனவே, மேற்சொன்ன உயர்நீதிமன்ற வழக்கை மீண்டும் விசாரணை செய்ய எனது வழக்கறிஞர் மு.ஞானசேகரன் அவர்கள் கடந்த 26.05.2021 அன்று உயர்நீதிமன்ற பதிவாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்