தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி இந்திய குடியரசு தலைவருக்கு அளிக்க வேண்டிய கடிதத்தை சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனிடம் அவரது அலுவலகத்தில் வழங்கினார்.
பின்னர் அவர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “மோடி அரசு கரோனாவை எதிர்த்து போராடும் கடமையை, செய்ய தவறிவிட்டது. தவறான நிர்வாகத்தால் மோடி அரசு கிரிமினல் குற்றத்தை இழைத்துள்ளது என்பதுதான் உண்மை. கரோனா தொற்றுக்கு தடுப்பூசி மட்டுமே பாதுகாப்பு. ஆனால் மோடி அரசின் தடுப்பூசி போடும் வியூகம் ஆபத்தானதாகவும், தவறானதாகவும் இருக்கிறது” என குற்றம் சாட்டினார்.
தடுப்பூசி போடுவதற்கான கடமையை செய்ய மோடி அரசு தவறிவிட்டது. தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதியிருந்து அரசு முற்றிலும் மறந்து விட்டது. மோடி அரசு வேண்டுமென்றே தடுப்பூசி திட்டத்தை மெதுவாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரே தடுப்பூசிக்கு பலவிதமான விலைகளை நிர்னைப்பதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது என்றார்.
மேலும் தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான முதல் ஆர்டரை கடந்த ஜனவரி மாதம் தான் மோடி அரசு கொடுத்துள்ளது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மோடி அரசு மாநில அரசுகளுக்கும் சேர்ந்து இன்றுவரை 39 கோடி தடுப்பூசிகளை மட்டுமே ஆர்டர் செய்துள்ளது. இதுவரை இந்திய மக்கள் தொகையில் 3.17 சதவீதம் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் வயதானவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிப்பதற்கு மூன்று ஆண்டுகள் ஆகிவிடும். இந்த சூழலில் கரோனாவின் மூன்றாவது அலையின் போது நமது மக்களை எப்படி காப்பாற்ற முடியும் என்ற கேள்விக்கு மோடி அரசிடம் இருந்து பதில் இல்லை.
நம் நாட்டில் கரோனா தொற்றில் மக்கள் பாதிக்கப்பட்டபோது மோடி அரசு 6 கோடியே 63 லட்சம் தடுப்பூசி மருந்துகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது இந்த தேசத்துக்கு இழைத்த மிகப் பெரிய அவமதிப்பு. தடுப்பூசிகளுக்கு பல விலைகளை மோடி அரசு நிர்ணயித்தது மக்களின் துயரத்தில் இருந்து லாபம் ஈட்டியதற்கு இதுவே உதாரணம். தடுப்பூசிகளை மத்திய அரசு ரூ 150, மாநில அரசுகளுக்கு 300 தனியார் மருத்துவமனைக்கு 600 என பல்வேறு விதங்களாக விற்பனை செய்து மக்களின் துயரத்தில் இருந்து லாபம் சம்பாதிக்க மோடி அரசு துணை போகிறது. எனவே பாஜக அரசு தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்து அதனை மாநில அரசுக்கும், தனியார் மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்பதே காலத்தின் தேவையாக இருக்கிறது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து கரோனா ஒழிப்பதற்காக பல்வேறு செயல்களில் சிறப்பக ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்துக்கள்.
தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி தொழிற்சாலை நோய்வாய்ப்பட்டு உள்ளது இதனை தமிழக அரசு தடுப்பூசி தயாரிக்க அனுமதி கேட்கிறது. இதற்கு பதில் கூறாத மோடி அரசு மேற்கு வங்க மாநிலத்தின் தலைமை செயலாளருக்கு எப்படியெல்லாம் தண்டனை அளிக்க முடியும் என்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
150 ஆண்டுகள் தடுப்பூசிகள் தயாரிப்பில் அனுபவமிக்க நமது பொதுத்துறை நிறுவனத்திற்கு அனுமதி வழங்காதது வேதனைக்குரியது. மோடி அரசின் பொருளாதாரக் கொள்கை முற்றிலும் தவறானது. வீராணம் ஏரியில் தற்போது தண்ணீரின்றி காய்ந்து உள்ளது. எனவே அதிலுள்ள களிமண்ணை அனைத்து மக்களும் இலவசமாக எந்த விதிமுறைகளும் இல்லாமல் எடுத்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்தால் வீராணம் ஏரி தானாக தூர்வாரப்படும். இதனால் அதிக தண்ணீரை தேக்கி வைக்கப்படும் என கூறினார். இவருடன் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செந்தில்நாதன், மத்திய மாவட்ட தலைவர் திலகர், மாநில பொது செயலாளர் சேரன், மாநில செயலாளர் சித்தார்த்தன் உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.