தி.மு.க. தலைவர் கலைஞரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு கலைஞரின் மிகப்பெரிய படம் வைக்கப்பட்டு, தி.மு.க. கொடி நடப்பட்டுள்ளது. நினைவிடம் பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கலைஞரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து திமுக தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று 3வது நாளாக அஞ்சலி செலுத்தனிர். 4வது நாளாக இன்றும் திமுக தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். இன்று திரைப்பட நடிகர் தியாகராஜன், அவரது மகன் நடிகர் பிரசாந்த் ஆகியோர் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தியாகராஜன், அவர் எழுதி பொன்னர் சங்கர் என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதனை வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். தினமும் அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று வருவார். அவருடன் நாங்களும் அமர்ந்து பார்ப்போம். அப்படிப்பட்ட தலைவர் இன்று நம்முடன் இல்லை என்று கண்ணீர் சிந்தினார்.
பின்னர் பேசிய பிரசாந்த், கலைஞர் அய்யா என்னை எப்போதும் தம்பி என்று பாசமாக அழைப்பார். அவருடைய வசனத்தில் உருவான பொன்னர் சங்கர் படத்தில் நான் நடித்தது பெரிய பாக்கியமாக கருதுகிறேன். அவர் தற்போது நம்முடன் இல்லை. அவருடைய குடும்பத்தார் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.