உளுந்தூர்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ’வாக இருப்பவர் குமரகுரு. இவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மிக நெருங்கிய நண்பர். இவர் கடந்த பத்தாண்டுகளாக இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ’வாக இருந்து வருகிறார். தற்போது நடைபெற உள்ள தேர்தலில் இவரை மீண்டும் அதிமுக வேட்பாளராக கட்சித் தலைமை களமிறக்கியுள்ளது. கட்சியினரையும் கடந்து தொகுதி முழுவதும் பலரையும் கரன்சி மழையில் நனைய வைத்து வருகிறார் குமரகுரு.
அப்படிப்பட்ட அவரை ஓட்டு கேட்டு சென்றபோது செங்குறிச்சி கிராம மக்கள் முற்றுகையிட்டுள்ளனர். இதைக்கண்டு எம்.எல்.ஏ திகைத்துப் போய் நின்றுள்ளார். அவரை ஓட்டு கேட்க விடாமல் தடுத்து முற்றுகையிட்ட கிராம மக்கள், தங்கள் ஊரில் பல ஆண்டுகளாக வீதிகள் சீரமைக்கப்படவில்லை, சாக்கடை நீர் தேங்கி வியாதிகளை உண்டாக்குகிறது, இப்பகுதியில் சாலை மிக மோசமாக உள்ளதாக கூறினர். இப்படி எங்கள் கிராமத்தின் அடிப்படை தேவைகளை சீரமைக்க கோரி பலமுறை எம்.எல்.ஏ’விடம் நேரில் சென்று முறையிட்டும் அவர் எங்கள் ஊரை திரும்பிக்கூட பார்க்கவில்லை. அப்படிப்பட்டவர் இப்போது ஓட்டு கேட்க மட்டும் எதற்கு ஊருக்குள்ளே வர வேண்டும்? இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டு அந்த மக்கள் எம்.எல்.ஏவை திகைக்கவைத்தனர்.
இதைக் கண்டு எம்.எல்.ஏ மிரண்டு போனார். பின்னர் மறியல் செய்தவர்களிடம் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் சமாதானம் செய்தனர். அப்போது மக்கள் ஊரில் உள்ள தெருக்களையும், சாலையையும் சீரமைக்க எம்.எல்.ஏ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். மிகவும் பதற்றத்தோடு இருந்த எம்.எல்.ஏ, வெற்றிபெற்றதும் உடனடியாக அனைத்து கோரிக்கைகளையும் சீரமைத்து தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து சுமார் ஒருமணி நேரம் முற்றுகைக்குப் பிறகு குமரகுரு எம்எல்ஏவை செங்குறிச்சி கிராம மக்கள் விடுவித்தனர். அதன்பிறகு அவர் அந்த ஊரில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு கிளம்பி சென்றுள்ளார். வெற்றி உறுதி என்று பவனி வந்துகொண்டிருந்த எம்.எல்.ஏ குமரகுரு, செங்குறிச்சி மக்களின் கடும் எதிர்ப்பைக் கண்டு சித்தம் கலங்கி உள்ளார். எப்படியும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கட்சியினருடன் சேர்ந்து களப்பணியை முடுக்கிவிட்டுள்ளார் எம்.எல்.ஏ குமரகுரு.