கடந்த சில தினங்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அண்ணாமலையும் உடன் இருந்தார். இந்த சந்திப்பு குறித்து பாஜக மாநில பொருளாளர் சேகர் தனது ட்விட்டர் பதிவில், “1 vs 6 மலைக்கு சமம் இல்லை என்பதால் ஆறு தலைகளுடன் நடந்த கூட்டம். தமிழகத்தில் எந்த முடிவையும் மலையே எடுப்பார். அவர் இல்லாமல் டெல்லி தனியாக முடிவெடுக்காது என்பதை ஆறாக உடைந்து போன அதிமுகவுக்கு உணர்த்திய அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தோழமை கூட்டணியின் அடிப்படையில் மரியாதை நிமித்தமாக உள்துறை அமைச்சரை நாங்கள் சந்தித்தோம். சந்திப்பின் போது அண்ணாமலையும் இருந்தார். சந்திப்பிற்கு பின் பாஜகவை யாரும் விமர்சனம் செய்வது இல்லை. எங்களுக்கு விமர்சனம் செய்யத் தெரியாதா? எல்லோரையும் கண்ட்ரோல் செய்து வைத்துள்ளோம். ஒரு கட்டுப்பாடு உள்ளது. அந்த கட்டுப்பாடு ஏன் அந்த கட்சியில் இல்லை.
பாஜகவின் மாநில பொருளாளர், அதிமுக தலைமை சரியில்லை என்றும் ஐந்து ஆறாக கட்சி உடைந்துவிட்டது என்றும் சொல்கிறார். கட்சி உடைந்துவிட்டதா? இன்று ஒருமித்த கருத்துடன் எடப்பாடி பழனிசாமியின் கீழ் கட்சி சென்று கொண்டுள்ளது. அப்படி இருக்கும் போது ஆறாக உடைந்துவிட்டது என்கிறார். இவருக்கு என்ன மஞ்சள் காமாலையா. இது அண்ணாமலை சொல்லி நடக்கிறதா? சொல்லாமல் நடக்கிறதா? அண்ணாமலை தெளிவுபடுத்த வேண்டும்.
இவை எல்லாம் அண்ணாமலை சொல்லி நடக்கிறதா? சொல்லாமல் நடக்கிறதா? அதுதான் கேள்வி. இன்று பகல் 1 மணி அளவில் செய்தியாளர்களைச் சந்திக்கிறாராம். அப்போது அண்ணாமலை இதுகுறித்து பகிரங்கமாக எங்கள் பொருளாளர் எனக்கு தெரியாமல் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். நான் அவரை கண்டிக்கிறேன் எனச் சொல்ல வேண்டும். அப்படி தெரிவித்தால் தான் அவர் மேல் சந்தேகம் இருக்காது. அப்படி இல்லை என்றால் அண்ணாமலை சொல்லித்தான் செய்கிறார்கள் என நினைக்க வேண்டி வரும்” எனக் கூறினார்.