வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் இன்று வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில் வேட்பாளர் ஏ.சி. சண்முகம் கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது; “மோடி மூன்றாவது முறையாக பிரதமராக அமர வேண்டும் என்று இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியின் வேலூர் தொகுதி வேட்பாளராக தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன். ஏற்கெனவே இந்த தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளேன். நான்காவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறேன். மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நான் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். அதற்கு அதிமுக மாவட்ட பொறுப்பாளர் மாப்பிள்ளை, திமுக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் திமுகவுடன் கை கோர்த்துக்கொண்டு வேலை செய்தார். அது யாராலும் மறக்க முடியாது. இரட்டை இலைக்கு சொந்தமான வாக்குகள் திமுகவுக்கு போனது தமிழ்நாட்டில் வாணியம்பாடியில் தான் இருக்கும்.
உதாரணத்திற்கு 2014ஆம் ஆண்டு வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நான் தாமரை சின்னத்தில் போட்டியிட்டபோது வாணியம்பாடி தொகுதியில் இரட்டை இலை முதல் இடத்திலும், தாமரை இரண்டாவது இடத்தில் இருந்தது. இரண்டு கட்சிகளுக்கு இடையில் வெறும் 1600 வாக்குகள் வித்தியாசம் இருந்தது.
போன நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் நான் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டேன். அப்போது 8 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். அப்போ அதிமுகவின் சுமார் 30 ஆயிரம் வாக்குகள் எங்கே போனது. என்னை கூட்டிட்டு வந்து இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட வைத்து பழிவாங்கினர். அதிமுகவில் ஒருவரை தவிர நான் எல்லாருக்கும் கடமைப்பட்டு இருக்கிறேன்.
இம்முறை நான் வெற்றிபெற்றால் 6 தொகுதிகளில் இலவச திருமண மண்டபங்கள் கட்டி தருகிறேன், நீண்டகால கோரிக்கையான நியூ டவுன் ரயில்வே பாலத்தை ஒரு வருட காலத்திற்குள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கிறேன். சோலார் மூலமாக இலவச மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனப் பேசினார்.