எட்டுவழிச்சாலை திட்டத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை முதல்வர் விளக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தற்போது சென்னை-சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தில் இரட்டை நிலைப்பாட்டினை தி.மு.க. அரசு எடுத்திருக்கிறது. தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் புது டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சரை சந்தித்துப் பேசிய பிறகு, ‘சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை தி.மு.க. எதிர்த்தது என்பதும், தற்போது நிலையை மாற்றிக் கொண்டதாக’ கூறுவதும் சரியானது அல்ல; இது ஏற்புடையதும் அல்ல.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கமிஷன் வாங்குவதற்காக மக்களைப் பற்றி கவலைப்படாமல், விவசாயத்தைப் பற்றி கவலைப்படாமல் 10,000 கோடி ரூபாய் திட்டத்தைக் கொண்டு வர அரசு முனைப்பாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘தி.மு.க.விற்கு வாக்களித்தால் சென்னை-சேலம் எட்டு வழிச் சாலை திட்டம் நிறுத்தப்படும்’ என்று கூறினார். மேலும், ’இந்தத் திட்டத்தின்மூலம் 8000 ஏக்கர் விவசாய நிலங்கள், காப்புக் காடுகள், மலைகள், பாதிப்படையும்’ என்றும் கூறினார். திமுகவின் இந்த இரட்டை நிலைப்பாட்டிற்கு அதிமுக சார்பில் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது எட்டு வழிச் சாலை திட்டத்தை எதிர்த்த திமுகவின் தற்போதைய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கூறியதற்கு முதல்வர் எதுவும் பேசாமல் உள்ளார். இது மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது. இந்த திட்டம் குறித்த திமுகவின் நிலைப்பாட்டை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.