தமிழகம் முழுவதும் தற்போது ஆவின் சேர்மன் பதவிகளில் இருக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள் மீது பல்வேறு சர்ச்சை தொடர்ந்த வண்ணம் இருந்தன. ஆவின் சேர்மன் பதவிகளில் இருப்பவர்கள் மீது தொடர்ச்சியாக ஊழல் மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது.
அதிமுகவில் இரண்டு அணிகள் இணைப்பின் முக்கிய பிரமுகர்களை சமாதானப்படுத்துவதற்காக ஆவின் சேர்மன் பதவி கொடுக்கப்படுவதாக தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த மாவட்டங்களாக இருந்த ஆவின் சேர்மன் பதவிக்கு 2 மாவட்டமாக பிரித்து பதவி வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில் குழப்பத்தில் இருந்த பிரிக்கப்பட்ட 14 சேர்மன் பதவிகள் உள்ளிட்ட கமிட்டியை கலைத்துவிட்டு புதிய தேர்தல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் மூலம், 14 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களுக்கு (ஆவின்) தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி, கரூர், மதுரை, தேனி ,விழுப்புரம், கடலூர், ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கோயமுத்தூர் உள்ளிட்ட 14 ஒன்றியங்களில் 17 உறுப்பினர்கள் உள்ளிட்ட தலைவர் துணைத்தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த ஒன்றியங்களில் பால்வளத் துறை துணைப் பதிவாளர் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சியைப் பொருத்தவரையில் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி பிப்ரவரி 27. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 28. வேட்பாளர் இறுதிப் பட்டியல் பிப்ரவரி 29. வாக்குப்பதிவு நடைபெறும் நாள் மார்ச் 4. தேர்தல் முடிவு அறிவிக்கும் நாள் மார்ச் 5 என்று அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது.
திருச்சி ஆவின் சேர்மன் பதவிக்கு திருச்சி ,முசிறி ,மணப்பாறை ,துறையூர், பெரம்பலூர் ,வேப்பந்தட்டை ,அரியலூர், ஜெயங்கொண்டம். ஒன்பது தொகுதிகளில் இருந்து 17 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்கிறார்கள்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் திருச்சி ஆவின் சேர்மனாக இருந்த கார்த்திகேயன் பதவி கலைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சியை பொருத்தவரை ஏற்கனவே முதல்வர் எடப்பாடியின் நிழல் என்கிற அதிகாரத்தோடு எந்தவித நடைமுறையும் பின்பற்றாமல் ஆவின் சேர்மன் ஆனார் கார்த்திகேயன்.
சமீபத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ஆவின் கார்த்திகேயன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கட்சியினர் வைத்ததினர்.
தற்போது மீண்டும் கார்த்திகேயன் அந்த பதவியை தக்கவைத்துக் கொள்வாரா என்பது தான் தற்போது கட்சியினரிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.