புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததிலிருந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே அதிகாரப் போட்டி நடந்து வருகிறது. அரசு நிர்வாகத்தில் கிரண்பேடியின் தலையீட்டால் நிர்வாகம் செயல்படாமல் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக ஆளும் காங்கிரஸ் கட்சியும், அதன் தோழமைக் கட்சிகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கிரண்பேடி தீவிரம் காட்டி வருகிறார். கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 20000 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிந்து நீதிமன்றம் மூலம் அபராதம் விதிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது புதுச்சேரி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சிகள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கிரண்பேடியின் அதிகார துஷ்பிரயோகத்தையும், அத்துமீறலையும் கண்டித்தும், கிரண்பேடிக்கு ஆதரவாக புதுச்சேரி அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக செயல்படும் மத்திய அரசை கண்டித்தும் புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பாக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முன்னதாக சட்டமன்றத்தில் இருந்து முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான் மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், கந்தசாமி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சியான திமுக எம்எல்ஏ சிவா உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்தில் இருந்து ஊர்வலமாக வந்து கவர்னர் மாளிகை முன்பாக சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநில வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக கூறி போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக கிரண்பேடியை கண்டித்து காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்பினரும் குவிந்து வருகின்றனர். இதனால் கவர்னர் மாளிகை பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. அதையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி ஆளுநருக்கு எதிராக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவாலின் போராட்டத்தை போன்றே கிரண்பேடிக்கு எதிராக ஆளும் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்துள்ள இந்த போராட்டம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.