மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியும் சிபிஎம்மும் முக்கியமான தொகுதிகளில் உடன்பாடு செய்து போட்டியிட சிபிஎம் அரசியல் தலைமைக்குழு முடிவு செய்திருப்பதாக சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணியில் சிபிஎம் இடம்பெறாது எனவும், மாநில அளவில் நிலைமைக்குத் தகுந்தபடி அந்தந்த மாநிலங்களில் பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதறாத அளவில் தொகுதி உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளும் எனவும் அவர் கூறினார்.
காங்கிரஸுன் கூட்டணி என்பது கேரளாவில் சிபிஎம்மிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று அந்த மாநிலக் குழு கூறியிருக்கிறது. அதேசமயம், மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு எதிரான மற்றும் திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிரான வாக்குகளை சிதறாமல் பாதுகாக்க வாய்ப்புள்ள தொகுதிகளில் இரு கட்சிகளும் தொகுதி உடன்பாடு செய்துகொள்வதே நல்லது என்று மேற்கு வங்க சிபிஎம் மாநிலக் குழுவும், காங்கிரஸும் கருத்துத் தெரிவித்துள்ளது. மக்களவையில் தற்போது சிபிஎம்மிற்கு 9 உறுப்பினர்களே இருக்கிறார்கள். அந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேசிய கட்சி என்ற அந்தஸ்த்தையும் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. எனவே, மாநில அளவிலான தொகுதி உடன்பாடுக்கு சிபிஎம் தயாராக இருக்கிறது என்று யெச்சூரி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸுடன் காங்கிரஸ் கட்சி சேராது. அந்தக் கட்சி ராகுலை தலைவராக ஏற்க மறுத்திருக்கிறது. எனவே, சிபிஎம்முடன் காங்கிரஸ் தொகுதி அளவில் உடன்பாடு செய்துகொள்ளும் என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவர் சோமேந்திர நாத் மித்ரா தெரிவித்திருக்கிறார்.