தமிழக முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நடத்திய போராட்டங்கள் அர்த்தமில்லாமல் போய்விட்டதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ''இன்றைக்குத் தமிழ் மொழிக்கு ஒரு ஆபத்து என்றால் களத்தில் முதன்மையாக நிற்பது அதிமுக தான். இதுவரை இல்லாத அளவிற்கு பிரதமர் உலக நாடு முழுவதும் சென்று திருக்குறளைப் பற்றிச் சொல்கிறார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொல்கிறார். இதுவரைக்கும் இருந்த பாரதப் பிரதமர்கள் தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் பிரதமர் என ஒருவர் கூட தமிழைப் பயன்படுத்தியதாக வரலாறு இல்லை. எனக்கு நினைவில் இல்லை. ஆனால் இன்றைக்கு பாரத பிரதமர் தமிழைப் பற்றிப் பேசுகிறார். நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது தமிழ்நாட்டிலிருந்து பட்ஜெட் தாக்கல் செய்கின்ற உணர்வுடன் நம் இந்திய தேசத்தின் நிதிநிலை அறிக்கையில் திருக்குறளை சொல்கிறார்கள். தமிழக கவர்னர் திருக்குறள் சொல்கிறார். இவையெல்லாம் தமிழை வளர்க்கக்கூடிய, தமிழுக்குப் பெருமை சேர்க்கக்கூடிய, தமிழுக்கு புகழ் சேர்க்கக்கூடிய நடவடிக்கை என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆகவே தமிழுக்கு ஆபத்து என்பது பிரச்சனையைத் திசை திருப்புகிற, மடைமாற்றம் செய்கிற ஒரு நடவடிக்கையாகத்தான் மக்களால் பேசப்படுகிறது. தவிர பயங்கரவாதம், தீவிரவாதம் என இன்று நெஞ்சை உறைய வைக்கிற பிரச்சனைகள் கண்ணுக்கு முன்னால் இருக்கிறது. இதைத் தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்றால் தமிழக முதல்வரிடம் பதில் இல்லை. என்னைக்கோ வரப்போகிறது என்று சொல்லி ஒரு கற்பனையான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளைக் கொண்டு மத்திய அரசின் மேல் இதே மாதிரி அர்த்தமில்லாத, உப்பு சப்பு இல்லாத போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அன்று டாஸ்மாக்கை குறைக்கணும் என்று சொன்னார்கள். இன்று தீபாவளி பரிசாக 791 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருக்கிறது. அன்னைக்கு ஒன்று சொன்னார்கள். இன்னைக்கு ஒன்று சொல்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவராக தமிழக முதல்வர் இருந்தபோது நடத்திய போராட்டம் எல்லாம் இப்பொழுது அர்த்தமில்லாமல் போய்விட்டது.