நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் நேற்று (27-10-24) நடைபெற்றது. அப்போது பேசிய த.வெ.க தலைவர் விஜய், “கொள்கை கோட்பாட்டு அளவில் நாம் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் நாம் பிரித்த்து பார்க்க போவது இல்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணோட இரண்டு கண்கள் என்பது தான் நம்முடைய கருத்து. அதனால், நாம் எந்த ஒரு குறிப்பிட்ட அடையாளத்திற்குள் சுருக்கிக் கொள்ளாமல், தமிழ்நாட்டு உரிமைகள் சார்ந்த, இந்த மண்ணுக்கான மத சார்ப்பற்ற சமூக நீதிக் கொள்கைகளை நம்முடைய கொள்கை அடையாளமாக முன்னிறுத்தி செயல்படப் போகிறோம்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், விஜய்யின் கொள்கை குறித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், “திராவிடமும், தமிழ் தேசியமும் இருகண்கண் என்று அவருடைய கருத்துகள், எங்களுடைய கொள்கைக்கு நேர் எதிரானது. திராவிடமும் தேசியமும் ஒன்று இல்லை. அது வேற, இது வேற. இது என் நாடு, என் தேசம், இங்கு வாழுகின்ற மக்களுக்கான அரசியல் தமிழ் தேச அரசியல். தெலுங்கு தேசம் கட்சி வைத்திருந்த என்.டி.ஆரை யாரும் எதிர்த்து பேசவில்லை. நாங்கள் தமிழ் தேசம் என்று வைக்கும் போது ஃபாசிஸம், சாவனிஸம், செபரிடிஸம் என்று சொல்கிறீர்கள். அது எங்களுக்கு ஏற்புடையது அல்ல.
எங்களுடைய கொள்கை தமிழ் தேசம். இரண்டு பேருடைய கொள்கையும் ஒன்றாக இல்லை. மற்றபடி, சில விஷயங்களை எல்லா, நாங்கள் சொல்வதை அவர் சொல்கிறார். எங்களுக்கு மொழி கொள்கையிலும் முரண்பாடு இருக்கிறது. எங்களுக்கு கொள்கை மொழி, எங்கள் தாய் மொழி தான். எங்களுக்கு மட்டுமல்ல, எல்லா மொழி தேசியனத்திற்கும் அந்நிய மொழி கொள்கையாக இருக்க முடியாது. உலக மொழிகள் எல்லா மொழிகளை நாங்கள் விரும்பினால் நாங்கள் கற்போம். ஆனால், கொள்கை மொழி, பாட மொழி, பயிற்று மொழி என எல்லா மொழியும் எங்களுடைய தாய் மொழி தமிழ் தான்” என்று தெரிவித்தார்.