அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு பதிலளித்து பேசுகையில் தமிழகத்தில் சட்டப்பேரவையில் ஜெயலலிதா மானபங்கம் படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டதாக ஆவேசமாக பேசியிருந்தார். இது தொடர்பான பேச்சுக்கள் தமிழக அரசியலில் மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது.
இந்நிலையில் 1989-ல் நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ''ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேச முயற்சித்தபோது இந்த கொடூரமான தாக்குதல் அன்றைய முதலமைச்சர் கலைஞர் முன்னிலையில் நடந்தது. அன்றைய அமைச்சர்கள், திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவை கடுமையாக தாக்கினர். அப்பொழுது திருநாவுக்கரசுவும், கே.கே.எஸ்.எஸ்.ஆர்-ம் அதை தடுத்தார்கள். அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம். தடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே இப்பொழுது இருக்கின்ற ஒரு மூத்த அமைச்சர் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுக்க, சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவின் தலை முடியை பிடித்து இழுக்க, மிகப்பெரிய கோரமான காட்சி சட்டமன்றத்தில் அரங்கேறியது. அன்றைய தினம் ஒரு கருப்பு நாள் என்று சொல்லலாம். 1989 மார்ச் 25ஆம் தேதி ஒரு கருப்பு நாளாக தான் இன்றும் பார்க்கப்படுகிறது. இன்றும் என் மனதிலே இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அன்றைய தினம் நான் சட்டமன்றத்தில் இருந்ததால் சொல்கிறேன். இதுபோன்ற கொடுமையான நிகழ்வு சட்டமன்ற வரலாற்றில் இதுவரை நடைபெற்றது அல்ல'' என்றார்.
அதேபோல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பில், ''ஜெயலலிதா சட்டமன்றத்தில் ஒரு பிரச்சனையை எதிர்கொண்டபோது அவருடைய ஆடைகள் எல்லாம் கிழிக்கப்பட்டு, அவர் மீது கனமான பொருட்கள் எல்லாம் எறியப்பட்டு ஒரு பெண் என்றும் பாராமல் துன்பப்படுத்தப்பட்டு சட்டமன்றத்தை விட்டு வெளியே வந்தார் என்பது வரலாறு. ஆனால் அப்படிப்பட்ட ஒன்று நடக்கவே இல்லை என்று தமிழக முதல்வர் சொல்கிறார். அவர்தான் அப்படி சொல்கிறார் என்றால் திருநாவுக்கரசு, அதிமுகவில் இருந்தவர் தான். எங்களுடனும் இருந்தவர்தான். அவரும் இப்படி செல்கிறார். பதவிக்காக கட்சிதான் மாறினார் என்று இல்லாமல், இன்று பதவிக்காக சாட்சியத்தையே மாற்றி இருக்கிறார் என்பதுதான் கவலையை கொடுக்கிறது. நடந்தது நடந்தது தான். இதை மறைப்பதனால் எந்த பலனும் இல்லை'' என்றார்.
இதேபோல் திமுக எம்பி திருச்சி சிவா இதுகுறித்த கேள்விக்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ''அன்றைக்கு ஜெயலலிதா பக்கத்தில் இருந்தவர் இன்றைய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு. இதைப்பற்றி அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள். அவர் சொன்னால் பொருள் இருக்கிறது. கே.கே.எஸ்.எஸ்.ஆர்-இடம் போய் கேளுங்கள். எடப்பாடி பழனிசாமி சொல்வதில் என்ன இருக்கிறது? 1989க்கெல்லாம் செல்ல வேண்டாம் ஜெயலலிதா மருத்துவமனைக்கு போகும் வரை இப்படி ஒருவர் (எடப்பாடி பழனிசாமி) இருப்பதே தெரியாது. கேபினட் அமைச்சர்கள் புகைப்படங்களை பாருங்கள் ஒரு ஓரத்தில் நின்று கொண்டு இருப்பார். ஆனால் அவர் எல்லாம் தெரிந்தது போல பேசிக் கொண்டிருக்கிறார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்; ஒரு கட்சியின் பொறுப்பில் இருக்கிறார் என்கின்ற போது பொறுப்போடு பேசட்டும். இதெல்லாம் நடந்ததை பக்கத்தில் இருந்து பார்த்தது போல் பேசக்கூடாது. பக்கத்தில் இருந்த திருநாவுக்கரசு என சொல்லி இருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும். கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் கேளுங்கள். அன்று சட்டமன்றத்தில் இருந்தவர்களுக்கு தான் தெரியும். கலைஞரின் கண்ணாடி உடைக்கப்பட்டது; அவர் கீழே தள்ளப்பட்டுள்ளது எல்லாம். அன்றே நாங்கள் பேசி முடித்து விட்டோம். இதெல்லாம் சந்தர்ப்பவாத அரசியலுக்காக பேசுகிறார்கள். நடந்ததை பற்றி எல்லா விளக்கங்களையும் ஏற்கனவே தந்தாகிவிட்டது'' என்றார்.