



ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, நடத்தப்பட்ட முதல் சட்டமன்றத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதன்படி, அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கக்கூடிய உமர் அப்துல்லா முதல்வராக பதவி வகித்து வருகிறார். அதே சமயத்தில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்களால் கடந்தாண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வந்தனர். பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் நாட்டின் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பயங்கரவாத தாக்குதலில் இன்று (22-04-25) சுற்றுலாப் பயணி ஒருவர் பலியாகியுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று, பைசரன் புல்வெளிகளில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ராணுவ சீருடை அணிந்து வந்த பயங்கரவாத கும்பல், சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், ஒரு பயணி கொல்லப்பட்டார் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதையடுத்து, பஹல்காம் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 'காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்பிவிட முடியாது' என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அரசு முறைப் பயணமாக சவுதி சென்றுள்ள பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தாக்குதல் சம்பவம் குறித்துக் கேட்டறிந்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தாக்குதல் நடந்த இடத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று பார்வையிட்டு மேல் நடவடிக்கை எடுக்க மோடி வலியுறுத்தியுள்ளார். இதனால் விரைவில் அமித்ஷா தாக்குதல் நடந்த பகுதிக்குச் சென்று செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.