
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவரான விமானப்படை அதிகாரி ஆதித்யா போஸ் என்பவர், தனது மனைவியோடு நேற்று முன் தினம் பெங்களூர் விமான நிலையத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பைக் ஓட்டுநர், அவர்களை பின் தொடர்ந்து கன்னட மொழியில் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலானது. இதில், விமானப்படை அதிகாரி ஆதித்யா போஸ் காயமடைந்தார்.
இதையடுத்து, ஆதித்யா போஸ் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, ‘பின்னால் இருந்து ஒரு பைக் வந்து எங்கள் காரை நிறுத்தியது. அந்த நபர் கன்னடத்தில் என்னை திட்ட ஆரம்பித்தார். என் காரில் ஒட்டப்பட்டிருந்த டிஆர்டிஓ (DRDO) ஸ்டிக்கரைப் பார்த்து நீங்கள் டிஆர்டிஓ ஆட்கள் என்று சொல்லி என் மனைவியைத் திட்டினர், என்னால் அதைத் தாங்க முடியவில்லை. நான் என் காரில் இருந்து இறங்கியவுடன், பைக் ஓட்டுநர் என் நெற்றியில் ஒரு சாவியால் அடித்தார், இரத்தம் வழிந்தது. நான் அங்கே நின்று, உங்களைப் பாதுகாக்கும் மக்களை நீங்கள் இப்படித்தான் பாதுகாக்கிறீர்கள், இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த ஒருவரை இப்படி நடத்துகிறீர்கள்' என்று கத்தினேன். ஆனால், அதிகமான மக்கள் அங்கு வந்து எங்களைத் திட்டத் தொடங்கினர். ஒரு மனிதன் கல்லை எடுத்து என் காரை மோத முயன்றான், அது என் தலையில் அடித்தது.
கர்நாடகா இப்படித்தான் மாறிவிட்டது, உண்மை, யதார்த்தம். என்னால் நம்பவே முடியவில்லை. கர்நாடகாவிற்கு குடியேறியவர்கள் கன்னடம் தெரியாததால் துன்புறுத்தப்பட்டுள்ளனர். கடவுள் நமக்கு உதவட்டும். கடவுள் நமக்கு பதிலடி கொடுக்காமல் இருக்க சக்தி கொடு. நாளை, சட்டம் ஒழுங்கு நமக்கு உதவவில்லை என்றால், நான் பதிலடி கொடுப்பேன்’ எனப் பேசினார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து விமானப்படை அதிகாரி ஆதித்யா போஸ் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னடம் தெரியாததாலும், கர்நாடகாவிற்கு குடியேறியதாலும் அவர்கள் துன்புறுத்தப்படுவதாக அதிகாரி ஆதித்யா போஸ் கூறியது மாநிலத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இதையடுத்து விமானப்படை அதிகாரி ஆதித்யா போஸ் அளித்த புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது, “கன்னடர்கள் தங்களது தாய்மொழியை வெறுப்பவர்கள் அல்ல, பெருமைப்படுவர்கள். கன்னடர்கள், மொழி பிரச்சனை காரணமாக மற்றவர்களை அடிக்கவோ, துன்புறுத்தவோ மாட்டார்கள். நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வந்து இங்கு குடியேறிய அனைவரையும் மரியாதையுடன் நடத்தி, கன்னடர்களாக நேசிக்கும் கன்னட மண்ணின் கலாச்சாரம் இதற்கு ஒரு சான்றாகும். நேற்றைய சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் யாராக இருந்தாலும், என்ன பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன். மாநில அரசு, இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக்கொண்டு, அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க கடமைப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.