Skip to main content

“ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வது நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கும் சிறுபிள்ளைத்தனமான முயற்சியாகும்” - மத்திய அமைச்சர்

Published on 04/04/2023 | Edited on 04/04/2023

 

law minister kiren rijiju talks about rahul gandhi appeal case related

 

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று  ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். ராகுல் தாக்கல் செய்த மனுவில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது. சூரத் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய நேரில் ஆஜரான அவருடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நேரில் வந்திருந்தனர். ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டிற்கு வரும் 10 ஆம் தேதி ராகுல் காந்தி மீது வழக்கு தொடுத்த புர்னேஷ் மோடி பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

 

மேலும், ராகுல் காந்திக்கு ஒரு மாத காலம் தண்டனையை நிலுவையில் வைத்திருந்த நிலையில் தற்போது சூரத் மாவட்ட நீதிமன்றம், ‘சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு முடிவடையும் வரை பிணை அமலில் இருக்கும் என்றும் இடைப்பட்ட காலத்தில் ராகுல் சிறை செல்லத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது. ராகுலுக்கு வழங்கப்பட்ட தண்டனையும் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் வரை நிலுவையில் இருக்கும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. ஏப்ரல் 13 அன்று ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வர உள்ள நிலையில், அன்று ராகுல் நேரில் ஆஜராக தேவையில்லை’ என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

 

இந்நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரின் ரிஜிஜூ இதுபற்றி கூறுகையில், “நீதித்துறையின் மீது தேவையற்ற அழுத்தத்தை கொடுக்க முயற்சிக்கிறது. நிதித்துறை விவகாரங்களை கையாளுவதற்கு தனி வழிமுறைகள் உள்ளன. அமலாக்கத்துறையினர் மற்றும் சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் அந்த அலுவலகங்களை முற்றுகையிடுகிறார்கள்.  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்போது நீதிமன்ற வளாகத்தை கைப்பற்ற விரும்புகிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் ஜனநாயகத்தை இழிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு இந்தியரும் இதனை கண்டிக்க வேண்டும். ராகுல் காந்தியுடன் அனைத்து காங்கிரஸ் கட்சி தலைவர்களும் செல்வதை பார்க்கும் போது இவர்கள் அனைவரும் ஒரு குடும்பத்தின் சித்தாந்தத்தில் உள்ளனர். அந்த குடும்பம் நாட்டை விட உயர்ந்ததா.

 

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் தண்டிக்கப்பட்ட போது காங்கிரஸ் கட்சி அமைதியாக இருந்தது. மேலும் ப.சிதம்பரம், டி.கே. சிவகுமார் ஆகியோர் தண்டிக்கப்பட்ட போதும் எவ்வித ஆதரவும் இல்லை. ஆனால் ராகுல் காந்திக்கு மட்டும் ஏன் இந்த நாடகம். நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சம்பந்தப்பட்ட நபர்கள் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக எந்த ஒரு குற்றவாளியும் தனிப்பட்ட முறையில் செல்வதில்லை. ஆனால் ராகுல் காந்தி செய்யும் மேல்முறையீடு நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கும் சிறுபிள்ளைத்தனமான முயற்சியாகும்" என்று தெரிவித்துள்ளார்.

 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவிக்கையில், "ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் செல்வது அவர்களின் தனிப்பட்ட முடிவு. சிறு வழக்குகளில் கூட குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். ஆனால் இது ஒரு முழு கட்சியை பற்றியது. ராகுல் காந்தி நாட்டுக்காக போராடுகிறார். எனவே சூரத்திற்கு கட்சித் தலைவர்கள் செல்வது பலத்தை காட்டுவதற்காக அல்ல. இதன் மூலம் ராகுலுக்கு ஆதரவு தெரிவிப்பது ஆகும்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்