
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு தலா 2,000 ரூபாய் என மூன்று தவணைகளில் 6,000 ரூபாய் வழங்கும் பிரதமர் மோடியின் நிதி உதவி திட்டம் நடைமுறையில் இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் 42 லட்சம் விவசாயிகள் பயனாளிகளாக இத்திட்டத்தில் இணைக்கப்பட்டனர். இதற்காக நடப்பாண்டில் 4,000 கோடி ரூபாய் ஒதுக்கியது மத்திய அரசு.
இந்த நிலையில், விவசாயிகள் அல்லாத பலபேர் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட புகார்களின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் போலி விவசாயிகள் கண்டறியப்பட்டதுடன் சுமார் 110 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதும் தெரியவந்தது. இந்த விவாகரம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசுமீது கடும் கோபத்தில் இருக்கிறது மத்திய அரசு.
இந்த ஊழல்களுக்கு உறுதுணையாக இருந்ததாக வேளாண் உதவி இயக்குநர்கள், கணினி ஆபரேட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள அலுவலர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது குறித்து பேசியுள்ள துறையின் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ‘’பிரதமரின் உதவித்தொகை திட்டத்தில் முறைகேடாக நிதி உதவி பெற்றவர்களிடமிருந்து 32 கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய 34 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் , 80 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 18 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் குற்றம் செய்திருப்பவர்கள் அரசு அதிகாரிகளாக இருந்தாலும் தனி நபர்களாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது. 110 கோடிவரை ஊழல் நடந்திருக்கும். இந்த விவகாரத்தில் உண்மையான விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது‘’ என்கிறார் அதிரடியாக!