சென்னையில் கடந்த மாதம் தங்க தமிழ்செல்வன் தி.மு.க.வில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து தேனி அருகே உள்ள வீரபாண்டியில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க. வில் இணையும் விழா மற்றும் தி.மு.க. பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது.
இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,
நம்முடைய தங்க தமிழ்ச்செல்வன் அவர்களைப் பற்றி உங்களுக்கு நான் அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் "கொல்லன் தெருவில் ஊசி விற்ற கதை". எனவே அவரைப் பற்றி அறிந்தவர்கள் நீங்கள் புரிந்தவர்கள் நீங்கள். அவரைப்பற்றி எங்களைவிட உங்களுக்குத் தான் அதிகம் தெரியும். சட்டமன்றத்தில் தான் நாங்கள் அவரோடு பார்க்கின்ற நேரத்தில் மட்டுமல்ல சில நேரங்களில் யாருக்கும் தெரியாமல் அவரோடு பழகுகின்ற வாய்ப்பையும் பெற்றதுண்டு.
அவரிடத்தில் எனக்கு மிக மிக பிடித்த விஷயம் என்னவென்று கேட்டீர்கள் என்றால். எப்பொழுதும் சிரித்த முகமாக இருப்பார். நான் தொலைக்காட்சிகளில் அடிக்கடி பார்க்கிறதுண்டு. ஊடகங்களில் அவர் விவாதங்களில் பங்கேற்று பேசுகின்ற அந்த காட்சிகள், பத்திரிகையாளர்களிடத்தில் அவர் தரக்கூடிய பேட்டி இவற்றை எல்லாம் பார்க்கின்ற வாய்ப்பு எனக்கு பல நேரங்களில் கிடைப்பதுண்டு. எதற்கும் சலித்துக்கொள்ள மாட்டார். கோவப்படுகின்ற அளவிற்கு - கிண்டல் செய்து - கொச்சைப்படுத்தும் விதமாக கேள்வி கேட்பார்கள் அவற்றையெல்லாம் அவர் சட்டை செய்யாமல் அப்படியே சிரித்துக்கொண்டே அதற்கு பதில் சொல்லக்கூடிய காட்சியைப் பார்த்து அவரை உள்ளபடியே நான் இந்த நேரத்தில் பாராட்ட விரும்புகின்றேன்.
ஒரு பழமொழி உள்ளது "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பார்கள். அதுபோல் அவருடைய சிரிப்பு கள்ளம் கபடம் இல்லாத ஒன்று. சட்டமன்றத்தில், நாங்கள் ஆளும் கட்சியாகவும், அவர்கள் எதிர்க்கட்சியாகவும் உட்கார்ந்து இருக்கின்றார்கள். அதன் பிறகு, அவர்கள் ஆளும் கட்சியாகவும் நாங்கள் எதிர்க்கட்சியாகவும் உட்கார்ந்து இருக்கக்கூடிய காட்சிகள் சட்டமன்றத்தில் இருப்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். அவரும் சட்டமன்றத்தின் ஆளும் கட்சி உறுப்பினராக உட்கார்ந்திருக்கின்றார்.
அம்மையார் அவர்கள் இருந்த நேரத்திலும், அதற்குப் பிறகு அவர் மறைந்த நேரத்திலும், எப்பொழுதும் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் எதிர்க்கட்சியினரை பார்த்து விமர்சனம் செய்வார்கள். அதேபோல் எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய நாங்களும் சில நேரங்களில் ஆளும் கட்சியைப் பார்த்து விமர்சிக்கின்ற, அந்த வாய்ப்பையும் பெறுகின்றோம் அதுதான் சட்டமன்றத்தின் மரபு, அதற்குரிய விளக்கத்தை சொல்வது. சில நேரங்களில் ஆளும் கட்சியில் இருக்கக்கூடிய அமைச்சர்களோ அல்லது சட்டமன்ற உறுப்பினர்களோ வரம்பு மீறி கூட எதிர்க்கட்சியை பார்த்து விமர்சனம் செய்வதுண்டு. ஆனால், தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றேன் அவர் கேள்விகளைக் கேட்பார், விமர்சனம் செய்ததுண்டு ஆனால் தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்கின்ற அந்த வழக்கத்தை அவர் பெற்றதில்லை. எதையும் நாகரிகத்தோடு பேசுவார்.
நான் சில நேரங்களில் சட்டமன்றத்தில் பேசிவிட்டு வெளியில் வருகின்ற பொழுது எதிரில் பார்த்ததுண்டு. பார்த்ததும் அருகில் வந்து "அண்ணே சூப்பரா பேசினீங்க" என்று சொல்லிவிட்டுப் போவதுண்டு. சபையில் சொல்ல முடியாது சொன்னால் அவருக்கு ஆபத்து வந்துவிடும். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளியில் வந்து அதை சொல்லி விட்டுப் போவார். அது மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில் அவர் ஆளும் கட்சி உறுப்பினர். அவரே சபாநாயகரை எதிர்த்து வெளிநடப்பு செய்திருக்கின்றார். ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்றெல்லாம் பார்க்காமல் எல்லோரிடத்திலும் சகஜமாக அன்போடு பழகக்கூடிய ஒரு நல்ல உள்ளம் படைத்திருக்கக்கூடியவர், தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள்.
அதனால்தான், நாங்கள் இப்பொழுது மட்டுமல்ல ரொம்ப நாட்களாகவே எப்படியாவது தூண்டில் போட்டு இழுக்க வேண்டும் என்று நாங்கள் அந்த முயற்சியில் ஈடுபட்டதுண்டு அவர் மாட்டவில்லை. ஆனால், இப்பொழுது மாட்டிவிட்டார். கொஞ்சம் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறார் அதுதான் உண்மை. இவ்வாறு பேசினார்.