குஜராத்தில் சாதி வன்மத்தால் தலித் இளைஞர் படுகொலை! - நேரில் கண்டவரின் சாட்சி
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் தலித் இளைஞர் ஒருவர், குஜராத்தின் பாரம்பரிய நடனத்தைப் பார்த்ததற்காக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை நேரில் கண்டவர் காவல்நிலையத்தில் படபடத்த குரலுடன் தனது சாட்சியத்தை அளித்துள்ளார்.
கொல்லப்பட்ட இளைஞரின் பெயர் ஜயேஷ் சோலன்கி(வயது 20). இவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது நெருங்கிய உறவினர் பிரகாஷ் சோலன்கி. இவர் காவல்நிலையத்தில் கொலைச்சம்பவம் குறித்து அளித்த வாக்குமூலத்தில், ‘நானும், ஜயேஷும் பந்த்ரானியா கிராமத்தில் உள்ள சோமேஸ்வர் கோவிலில் நடைபெற்ற கர்பா நடன நிகழ்ச்சியைக் காணச் சென்றோம். அங்குள்ள மதில் சுவரில் அமர்ந்து நடன நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தபோது, அங்குவந்த சஞ்சய் பட்டேல் எங்களது சாதி பெயரைச்சொல்லி கீழ்த்தரமாக பேசினார். மேலும், என்ன பார்க்கிறீர்கள்? என்று கேட்டபோது, ‘நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ, அதையேதான் நாங்களும் பார்க்கிறோம்’ என ஜயேஷ் அவருக்கு பதிலளித்தார். இதில் ஆத்திரமடைந்த சஞ்சய் தனது ந்ண்பர்களுடன் வந்து எங்களைத் தாக்கினார். இந்தத் தாக்குதலைத் தடுத்த ஜயேஷின் கழுத்தைப் பிடித்து சுவரில் மோதவைத்தனர் சஞ்சயுடன் வந்தவர்கள். இதில் சுயநினைவை இழந்த ஜயேஷ் நிகழ்விடத்திலேயே சுருண்டு விழுந்தார். பின்னர், கோவிலில் நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தவர்கள் எங்கள் கூச்சலைக் கேட்டு ஓடிவந்து ஜயேஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே ஜயேஷின் உயிர் பிரிந்தது’ என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சஞ்சய் பட்டேல் உட்பட 8 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் மைனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சாதிய வன்மத்தால் உயர்சாதி வன்மத்தால், ஒருவரைக் கொடூரமாக கொலைசெய்த சம்பவம் நாடு முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
- ச.ப.மதிவாணன்