பீவின் (Fiewin)என்ற செயலி சீனர்களுக்கு சொந்தமான ஆன்லைன் கேமிங் செயலியாகும். சிறிய விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என இணையதளவாசிகளின் ஆசையைத் தூண்டியுள்ளது. இதனை நம்பிய பலரும் அந்த செயலில் எளிதாகக் கணக்கு துவங்கி விளையாடி பல வகைகளில் பணம் செலுத்தியுள்ளனர். செயலியில் தெரிவித்திருந்தது போல பணம் சேர்ந்த வண்ணம் இருந்தது. ஆயினும் பயனர்கள் கணக்குகளில் குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்ததும் அதனை அவர்கள் எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அந்த செயலி அந்த பணத்தை எடுப்பதைத் தடுத்ததுடன் அவர்கள் செலுத்திய பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஏமாந்த பலரும் காவல் துறையில் புகார் அளித்தனர். சுமார் 400 கோடி ரூபாய் அளவில் இந்த ஆன்லைன் மோசடி நடைபெற்றதாகக் கூறப்பட்ட நிலையில், இந்த வழக்கு அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு சீனர்கள், இந்தியர்கள் சிலரின் உதவியுடன் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. பயனர்கள் செலுத்திய தொகை கரன்சிகளாக மாற்றப்பட்டு சீனர்களின் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு உறுதுணையாகச் செயல்பட்ட ஒடிசாவைச் சேர்ந்த அருண் சாகு, அலோக் சாகு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சென்னையைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஜோசப் ஸ்டாலின் சீனாவைச் சேர்ந்த பை பெங் யுன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் அமலாக்கத் துறையினர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள சயா யாமோ (24) (Xia yamao), வூ யுவான் லுன் (25) (Wu Yuvan Lun ) ஆகிய இரு சீனர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று (14.11.2024) காலை சுமார் 9 மணியளவில் இரு கார்களில் வந்த ஐந்து பேர் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.