தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவருமான சுப்புராஜின் மகன் நாகமுத்து கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இந்த நிலையில் கோவிலில் கடை ஒதுக்குவது தொடர்பாக பூசாரி நாகமுத்துவுக்கும், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-ஸின் தம்பியான ஓ.ராஜாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் தான் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். இவரைத் தற்கொலைக்கு தூண்யடிதாக கோவில் அறங்காவலராகவும், பெரியகுளம் முன்னாள் நகர்மன்ற தலைவராகவும் இருந்த ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உள்பட 7 பேர் மீது பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவுப்படி கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்றபோதே பாண்டி என்பவர் இறந்து விட்டார். மற்ற 6 பேர் மீதான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓ.ராஜா, மணிமாறன், சிவக்குமார், ஞானம் லோகு, சரவணன் ஆகியோர் நிபந்தனையற்ற ஜாமீன் பெற்று இருப்பதால் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர்.
இந்த வழக்கில் 23 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டு 196 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 4 தடயங்கள், சாட்சியங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அரசு தரப்பின் இறுதிக் கட்ட வாதத்திற்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஓ.ராஜா உட்பட 6 பேரும் காலையிலேயே நீதிமன்றத்தில் ஆஜராகினர். பழங்குடியின மற்றும் பட்டியலின சிறப்பு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். சாட்சிகள் அளித்த தகவல்கள் ஒருமனதாக இல்லை என்றும், தற்கொலைக்கு தூண்டியதற்கான அடிப்படை முகாந்திரம் இல்லாததால் விடுதலை செய்யப்படுவதாகத் தெரிவித்தார். அதன் அடிப்படையில் தான் ஓ.ராஜா உள்பட ஆறு பேரும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
இது சம்பந்தமாக ஓ.ராஜாவிடம் கேட்டபோது, “என் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டதின் பேரில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நீதிமன்றத்தில் நான் குற்றமற்றவன் என நிரூபிக்கப்பட்டு இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு இருக்கிறேன். இது சம்பந்தமாக அவர்கள் மேல்முறையீடு செய்தாலும் நானும் மேல்முறையீடு செய்வேன்” என்று கூறினார்.
இது சம்பந்தமாகப் பூசாரி நாகமுத்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் வாதாடி வந்த அரசு தரப்பில் நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞரான ப.பா.மோகனிடம் கேட்டபோது, “கைலாசநாதர் கோயில் பூசாரியாக இருந்த நாகமுத்து கடந்த 5.5.2012ம் தேதி இரவு கிரிவலம் சுற்றி வரும்போது அங்கிருந்த இரண்டு நபர்கள் ஜாதியை சொல்லித் திட்டி அடித்து இருக்கிறார்கள். இதனால் மனம் நொந்துபோன நாகமுத்து பெரியகுளம் போலீசில் ஓ.ராஜா மீது புகார் கொடுத்து இருக்கிறார். இந்த விசயம் அவர்களுக்கு தெரியவே வாபஸ் வாங்கச் சொல்லி நாகமுத்துவின் தந்தையான சுப்புராஜை மிரட்டி இருக்கிறார்கள். அப்படியிருந்தும் வழக்கின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை அதுபோல் ஓ.ராஜாவிற்கு ஆதரவாக அப்போது இருந்த போலீஸ் அதிகாரிகளான சேது, உமா, இளங்கோ ஆகியோரும் வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டி இருக்கிறார்கள். அதோடு திருட்டு பலியையும் சுமத்தி இருக்கிறார்கள். இதனால் வாழ்வதை விடச் சாவது தான் அவரது விருப்பம் என நினைத்து தான் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு 8.12.2012ல் நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் மக்கள் போராட்டம் செய்தும் கூட இந்த வழக்கைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் கிடப்பிலேயே போட்டுவிட்டனர்.
அதன்பின் தான் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் 24 சாட்சிகளிடம் விசாரணை செய்தோம். இந்த விசாரணை நடக்கும் போதே போலீஸ் அதிகாரிகளான சேது, உமா, இளங்கோ, செல்லப்பாண்டி ஆகியோரும் இதில் சம்மந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று போராடியும் கூட எடுபடவில்லை. அதோடு பூசாரி நாகமுத்து தற்கொலை செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே அவர் துன்புறுத்தப்பட்டு ஆளுங்கட்சி அதிகார பலத்தால் அவர்கள் குடும்பத்தையும் தாக்கி திருட்டுப்பட்டம் சுமத்தியதுனாலயே தான் தற்கொலை செய்து கொண்டார்.
தூண்டுதல் காரணமாக வன்கொடுமை தடுப்புச்சட்டப்படி பத்து ஆண்டுகள் தண்டனை கிடைக்கக்கூடிய வகையில் அதற்கான சாட்சிகளையும், ஆவணங்களையும் கொடுத்து இருக்கிறோம். அப்படியிருந்தும் அரசு தரப்பை பொறுத்தவரை காவல்துறை சரிவர ஒத்துழைப்பு இல்லை அப்படியிருந்தும் சட்டப் போராட்டம் மூலம் தான் ராஜா உள்பட 6 பேர் மீது இந்தியத் தண்டனை சட்டம் 306, 34 வன்கொடுமை சட்டம் 325ன் படி தண்டிக்கப் படக்கூடியவர்கள். அந்த அளவுக்கு ஜாதியை இழிவுபடுத்தித் திட்டி வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்ஸின் தம்பி ஓ.ராஜா பெரியகுளம் சேர்மனாக இருந்ததால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி காவல்துறையையே தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார். அதையெல்லாம் நாங்கள் இறுதி விசாரணையில் அம்பலப்படுத்தி இருந்தோம். இதன்மூலம் தான் இறுதி விசாரணை முடிந்ததின் மூலம் இன்று 14ம் தேதி தீர்ப்பு அளிப்பதாக நீதியரசர் முரளிதரன் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் தான் குற்றம் சாட்டப்பட்ட ஓ.ராஜா உள்பட ஆறு பேரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். வந்ததிலிருந்தே அவர்கள் மத்தியில் எந்த ஒரு சுணக்கமும் இல்லாமல் எப்போதும் போல்தான் இருந்தனர். அதோடு தீர்ப்பு நாளன்று ஓ.ராஜா உட்பட ஆறு பேரும் ஆஜராக வேண்டும் என்று நீதியரசர் கூறியிருந்ததை கண்டு அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட ஓ.ராஜா உள்பட ஆறு பேரும் கோர்ட்டுக்கு வந்தும் கூட அங்கு போலீஸ் பாதுகாப்பு இல்லாததை கண்டு தீர்ப்பில் மாற்றம் ஏதும் இருக்கும் என்ற எண்ணமும் என் மனதில் இருந்து வந்தது.
அதைத் தொடர்ந்து தான் இந்த வழக்கில் இருந்து ஓ.ராஜா உள்பட ஆறு பேரையும் நீதியரசர் விடுதலை செய்தார். ஆனால் இந்த தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. காவல்நிலையத்தில் சாதி பாகுபாடுகள் நடக்கிறது என்றால் அது நீதிமன்றத்திலும் இருக்கு ஆனால் ஆரம்பத்தில் இருந்தே போலீசார் புலன் விசாரணையை முறையாக செய்யவில்லை. அப்படியிருந்தும் என் சாவுக்கு ஓ.ராஜா தான் காரணம் என நாகமுத்து எழுதிய கடிதம் உண்மையானது என்று டாக்டர் ரிப்போர்ட் நிரூபித்து இருந்தோம். அதுபோல் வன்கொடுமை வழக்கையும் ஆரம்பத்திலேயே போடவில்லை. மூன்றாண்டுகளுக்கு பின்பு ஐகோர்ட்டில் போராடிய பின்பு தான் வன்கொடுமை சட்டத்தையே போட்டனர்.
இதையெல்லாம் வைத்துத்தான் இந்த வழக்கில்ஓ.ராஜா உள்பட ஆறு பேருக்கு பத்தாண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு முழுமையாகவே இருந்தது. ஆனால் ஓ.ராஜா உள்பட ஆறு பேர் விடுதலை என்று நீதியரசர் கூறிவிட்டார். அதைக்கண்டு பூசாரி நாகமுத்துவின் தந்தையான சுப்புராஜ் கண்கலங்கிவிட்டார். நான்தான் அவரை சமாதானம் செய்து மேல்முறையீடு மூலம் உங்கள் மகன் சாவிற்கு காரணமானவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பேன் என்று ஆறுதல் கூறினேன். அதைத் தொடர்ந்து தான் மதுரை உயர்நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்யத் தயாராக இருக்கிறோம். அதன்மூலம் ஓ.ராஜா உள்பட ஆறு பேருக்கும் தண்டனை வாங்கிக் கொடுப்பதிலும் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறினார்.