புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் கடந்த வாரம் வரை டீ விலை ரூ.10க்கும், பலகாரங்கள் விலை ரூ.5க்கும் விற்பனை ஆனது. டீ தூள், மாவு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் தொடர் விலை உயர்வால் கடந்த 10 ந் தேதி முதல் டீ விலை ரூ.12க்கும் பலகாரங்கள் விலை ரூ.7க்கும் விற்பனை செய்யப்படுவதாக டீக்கடைகாரர்கள் விலைப் பட்டியல் துண்டறிக்கை ஒட்டி விலை ஏற்றம் செய்துள்ளனர்.
அதே சமயம் பால் விலை உயரவில்லை டீ விலை உயர்ந்துவிட்டதாகச் சிலர் விலை உயர்வுக்கு எதிராகக் கண்டன துண்டறிக்கைகள் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் டீ விலை உயர்வு குறித்து ஆலங்குடி வட்டாட்சியர் கீரமங்கலம் பகுதியில் உள்ள டீ கடைகளுக்கு இன்று (14.11.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, ‘ஏன் இந்த விலை ஏற்றம்?’ என்று விசாரணையும் செய்தார்.
அப்போது, டீத்தூள், பலகாரங்களுக்குத் தேவையான மாவு, எண்ணெய் உள்ளிட்ட மூலப்பொருட்கள் தொடர்ந்து விலை ஏற்றப்படுவதுடன் தொழிலாளர்களின் சம்பளம் போன்ற செலவினங்களும் அதிகரித்துள்ளதால் கடை நடத்த ஏதுவாக விலை ஏற்ற வேண்டிய சூழலால் விலை ஏற்றப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.