குஜராத் மாநிலம் அகமதாபாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 12 ஆம் தேதி மணிநகர் ஸ்ரீ கிருஷ்ணா தமிழ்ப் பள்ளி வளாகத்தில் உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்த அய்யன் திருவள்ளுவரின் சிலை திறப்பு விழா, புதிய தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் அடிக்கல் நாட்டு விழா மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு அரசின் சார்பாகத் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டார். அமைச்சர் தலைமையில் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிதாசன் நிர்வாகிகள் பிரபாகரன், திருநாவுக்கரசு, ராஜா நரேஷ் ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது.
திருவள்ளுவர் சிலையை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி. சந்தோஷம் வழங்கினார். இது 147வது சிலையாகும். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக குஜராத் அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஈஸ்வர் விஸ்வகர்மா, புதுவை யூனியன் பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், கூட்டுறவுத் துறை அமைச்சர் சாய் சரவணன், முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம், மதிமுக துணைப் பொதுச் செயலாளரும் மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான மல்லை சத்யா, அகமதாபாத் மாநகராட்சி மேயர் கீர்த்தி குமார் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த குஜராத்தில் பணியாற்றும் இந்திய ஆட்சிப் பணியாளர்களான தென்னரசன், ரஞ்சித் குமார், நாகராஜன் மற்றும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர் ஜெகதீசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். உலகளாவிய அளவில் தமிழர்களின் பெருமை, தமிழ் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின் சிறப்புகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த நிகழ்வில் பேசினார்.