உத்திரப் பிரதேச மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (UPPSC) எதிராக அம்மாநில தலைநகர் பிராக்ராஜில் போட்டித் தேர்வர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக, இன்று (14.11.2024) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், போட்டித் தேர்வுகளை வெவ்வேறு ஷிப்டுகளில் நடத்துவது மற்றும் மதிப்பெண்கள் மதிப்பிடும் போது பின்பற்றப்படும் இயல்பாக்குதல் (normalisation) முறையைப் பயன்படுத்தல் போன்றவற்றை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எம்.பி., “பிரயாக்ராஜில் போராட்டம் நடத்தி வரும் போட்டித் தேர்வர்களிடம் உத்தரப் பிரதேச அரசு மற்றும் உத்திரப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அணுகுமுறை மிகவும் கருணையற்றது மற்றும் துரதிர்ஷ்டவசமானது. போட்டித் தேர்வுக்கான மதிப்பீட்டின் போது இயல்பாக்குதல் என்ற பெயரில் வெளிப்படைத்தன்மை இல்லாத முறை ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரே ஷிப்டில் தேர்வு நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது.
கல்வி முறையை சீரழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாஜக அரசின் கையாலாகாத்தனத்திற்கு மாணவர்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? . படிக்கும் மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டு, தற்போது காவல்துறையால் துன்புறுத்தப்பட்டுள்ளனர். தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக வீட்டை விட்டு விலகி பயிற்சியில் ஈடுபடும் இளைஞர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதியை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். போட்டித் தேர்வு மாணவர்களின் கோரிக்கையை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். அவர்களின் ஜனநாயக உரிமைகளை சர்வாதிகாரத்தால் நசுக்க முடியாது” என உத்தரப்பிரதேச அரசுக்குத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.