இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி – 23.4% உள்ளது என்று சமீபத்தில் தேசிய புள்ளியியல் அலுவலகமும் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமும் இணைந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இது 2020 -2021 ஆண்டின், முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவீடு என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவரது ட்வீட்டர் பக்கத்தில் மார்ச் 20 -ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பின் காணொளியின் ஒரு சிறு பகுதியைப் பதிவு செய்துள்ளார். அதில் “பெரும் சுனாமி போன்ற பொருளாதார பிரச்சனை வரப்போகிறது என அரசாங்கத்தை நான் தொடர்ந்து எச்சரித்து வருகிறேன். ஆனால் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. இதைச் சொல்வதற்கு என்னை மன்னிக்கவும், இன்னும் ஆறு மதத்தில் நமது நாட்டு மக்கள் நினைத்துகூட பார்க்காத அளவிலான வலியை அனுபவிக்கப்போகிறார்கள்” என அந்தக் காணொளியில் உள்ளது.
மேலும் “பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்தே நாட்டின் பொருளாதார வீழ்ச்சி தொடங்கிவிட்டது. அதன் பின்னும் அரசு தவறான கொள்கைகளையே மேற்கொண்டது” என்று ட்வீட் செய்துள்ளார்.