தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகம் முழுவதும் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது திருவாரூர் மாவட்டம் நன்னிலம், குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. மன்னார்குடி, ராயநல்லூர், விக்கிரபாண்டியம், சேந்தங்குடி, சேருவாமணி பகுதிகளிலும் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் மிதமான மழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில் திருவாரூரில் பெய்து வரும் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.