கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில், மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் நில ஒதுக்கீடு செய்ததில் 4000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மூடா மோசடி வழக்கு என அழைக்கப்படும் இந்த வழக்கில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருப்பது கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை, மைசூர் லோகஆயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க 5 கோடி முதல் 50 கோடி வரை பா.ஜ.க விலை பேசுகிறது என்று முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மைசூர் மாவட்டம் டி நரசிபுரா தொகுதியில் ரூ.470 கோடி செலவில் அரசு திட்டத்தை முதல்வர் சித்தராமையா நேற்று தொடங்கி வைத்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சித்தராமையா அரசை எப்படியாவது கவிழ்க்க, 50 எம்.எல்.ஏ.க்களுக்கு 50 கோடி ரூபாய் வழங்குவதாக பாஜக முன்வந்தது. அவர்களுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது? முன்னாள் முதல்வர்கள் பி.எஸ். எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா, பா.ஜ.க மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா ஆகியோர் பணத்தை அச்சடித்தார்களா?
கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்டார்கள்.. அந்தப் பணத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் ரூ.50 கோடி வழங்க முன்வந்தார்கள். ஆனால், இந்த முறை அதற்கு எங்கள் எம்.எல்.ஏ.க்கள் யாரும் சம்மதிக்கவில்லை.அதனால்தான் இந்த அரசை எப்படியாவது அகற்ற வேண்டும் என்ற பிரசாரத்தை ஆரம்பித்து பொய் வழக்குகளை பதிவு செய்கிறார்கள். பா.ஜ.க ஆளாத மாநில முதல்வர்களை, வருமான வரித்துறை, சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குனரகம் மூலம் பா.ஜ.க மிரட்டுகிறது” எனத் தெரிவித்தார்.