கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் பிறகு எதற்கும் துணிந்தவன், விக்ரம் ஆகிய படங்களுக்கு அடுத்து சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் கங்குவா. அண்ணாத்த படம் கொடுத்த சருக்களுக்குப் பிறகு அதை சரி செய்யும் நோக்கில் சூர்யாவுடன் கைகோர்த்த சிறுத்தை சிவா இத்தனை ஆண்டுகள் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கும் இந்த கங்குவா ரசிகர்களை ஈர்த்திருக்கிறதா, இல்லையா?
வழக்கமான கதைகளில் வருவது போல் நாயகன் சூர்யா திருடனை பிடிக்கும் திருடனாக வருகிறார். அவருக்கு அசிஸ்டன்ட் நண்பராக யோகி பாபு வருகிறார். இவர்கள் போலீசுடன் சேர்ந்து கொண்டு லோக்கல் ரவுடிகளை பிடித்துக் கொடுக்கும் வேலையை செய்து வருகின்றனர். படத்தில் வழக்கமான கதாநாயகியாக திஷா பதானி வருகிறார். இவரும் சூர்யாவுடன் சேர்ந்து கொண்டு அதே வேலையை செய்கிறார். இவர்களுக்குள் காதலும் மோதலும் கலந்து இருக்கிறது. ஒரு திருடனை பிடிக்கும் நேரத்தில் ஒரு சிறுவன் இவர்களிடம் மாட்டிக் கொள்கிறான். அந்த சிறுவன் சூர்யா காட்டும் பாசத்தில் பின்னி பிணைந்து விடுகிறான். சூர்யாவுக்கு அந்த சிறுவனுக்கும் தனக்கும் ஏதோ முன் ஜென்ம தொடர்பு இருக்கிறது என்பது போல் தோன்றுகிறது. அச்சிறுவனை கடத்தல்காரர்கள் கடத்தி சென்று விடுகின்றனர். அவர்களிடமிருந்து சூர்யா காப்பாற்ற முற்படுகிறார். இதற்கிடையே படம் பிளாஷ்பேக்கிற்கு செல்கிறது. அது முன் ஜென்ம கதையாக விரிகிறது.
1070களில் ஐங்கிராமம் என்று அழைக்கப்படுகிற ஐந்து மலை கிராமங்கள் ஒரு தீவில் இருக்கிறது. அதில் ஐந்து விதமான ஆதிவாசி கூட்டங்கள் வசிக்கின்றனர். அதில் பெருமாட்சி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கங்குவா என்ற சூர்யா, அதே தீவில் வசிக்கும் நட்டி, பெருமாச்சி மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விடுகிறார். இதனால் கொதித்தெழும் சூர்யா அவரை தீ வைத்து கொளுத்தி விடுகிறார். தன் கண்முன்னே கணவன் இறப்பதை பார்த்த மனைவியும் உடன்கட்டை ஏறுவதற்கு முன், தன் மகனை சூர்யாவிடம் கொடுத்துவிட்டு அவனை கடைசி வரை உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்று சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்து விடுகிறார். அந்த மகனைக் காப்பாற்ற சூர்யா போராடுகிறார். அந்த நேரத்தில் போர் விடுகிறது. அரத்தி கிராமத்தை சேர்ந்த பாபி தியோல் சூர்யாவை போட்டுத்தள்ள பெரும் படையுடன் திரளுகிறார். அவர்களிடம் இருந்து கங்குவா சூர்யா தன்னையும், அந்த சிறுவனையும் காப்பாற்றினாரா, இல்லையா? இக்காலகட்டத்திலும் முன் ஜென்மத்திலும் இவருக்கும் அந்த சிறுவனுக்கும் இருக்குமான பந்தம் என்ன? இக்காலகட்டத்தில் அந்த சிறுவனுக்கு என்ன ஆயிற்று? என்பதே இப்படத்தின் மீதி கதை.
1070 காலகட்டத்தை மிக மிக பிரம்மாண்டமான மேக்கிங் மூலம் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சிறுத்தை சிவா. படம் இக்காலகட்டத்தில் ஆரம்பித்து அப்படியே பின்னோக்கி சென்று முன் ஜென்ம கதையாக விரிந்து பின் மறுபடி காலகட்டத்திற்குள் வந்து ஒரு ஓபன் என்டோடு படம் முடிகிறது. படம் ஆரம்பித்த முதல் அரை மணி நேரம் சற்றே மெதுவாக நகர்ந்து நம்மை சோதிக்க வைத்தாலும் போகப் போக முன் ஜென்ம காட்சிகள் ஆரம்பிக்கும் பொழுது படம் வேகம் எடுத்து ஜெட் வேகத்தில் பயணிக்கிறது. பின்பு மீண்டும் இரண்டாம் பாதியில் மறுபடி சற்றே ஸ்பீடு பிரேக்கர் போட்டு மீண்டும் ஆக்சிலேட்டர் கொடுத்து வேகமான கதை மற்றும் திரைக்கதை மூலம் பயணித்து பிரமிப்பான உணர்வை கொடுத்து நிறைவாக முடிகிறது.
பழங்காலத்து மலை கிராமத்தில் நடக்கும் படியான காட்சிகளை மிக மிக சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறார் சிறுத்தை சிவா. அவர்களுக்குள் இருக்கும் போர் தந்திரங்கள், அதற்கு அவர்கள் பயன்படுத்தும் யுத்திகள், அதை நடைமுறைப்படுத்தும் விதம், கதாபாத்திரங்களின் ஆத்மார்த்தமான நடிப்பு, பெண்களின் வீரம், அவர்களை பயன்படுத்திய விதம், எதிரிகளை தனி ஒரு மனிதனாக எதிர்த்து தாக்கும் வித்தியாசமான யுத்திகள், மிருகங்களுடன் அதிரடி சண்டை காட்சிகள், பிரம்மாண்டமான செட்டுகள், மெய் சிலிர்க்க வைக்கும் வி எப் எக்ஸ் காட்சிகள், அதற்கு முத்தாய்ப்பாக அமைந்திருக்கும் 3டி தொழில்நுட்பம் ஆகியவை இப்படத்தை ஹாலிவுட் தரத்தில் எடுத்துச் சென்றிருக்கிறார் இயக்குநர் சிறுத்தை சிவா.
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு மேக்கிங் இல் திரைப்படம் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு ஒரு காட்டுவாசி திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமான மெய்சிலிர்க்கும் திரைப்படமாக கொடுத்திருக்கிறார். குறிப்பாக ஒரு சிம்பிளான கதையை வைத்துக்கொண்டு இந்த அளவு பிரம்மாண்டமாக காட்ட முடியும் என்று நிரூபித்த இயக்குநர் சிறுத்தை சிவா ஏனோ திரைக்கதையில் சற்றே சறுக்கி இருக்கிறார். இவ்வளவு தொழில்நுட்ப விஷயங்களுக்கு கவனம் செலுத்திய அவர் திரைக்கதையிலும் அதே கவனம் செலுத்தியிருந்தால் இந்த படம் மிக மிக பிரம்மாண்டமான ஒரு வெற்றி படமாக அமைந்திருக்கும். முதல் அரை மணி நேரம் வரும் காட்சிகளில் இருக்கும் வேகம் திரைக்கதையில் இல்லை. காமெடி காட்சிகளும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஈர்க்கவில்லை. பின்பு படம் ஆரம்பித்து பிரம்மாண்டமான விஷயங்கள் கண் முன் வர அவையெல்லாம் மறக்கடிக்கப்பட்டு நம்மை ரசிக்க வைக்கிறது.
பின்பு இரண்டாம் பாதியில் ஆரம்பிக்கும் சென்டிமென்ட் காட்சிகளும் அவ்வளவு எளிதாக மனதில் ஒட்டவில்லை. குறிப்பாக சிறுவனுக்கும் சூர்யாவுக்கும் ஆன கெமிஸ்ட்ரி பெரிதாக பார்ப்பவர்களுக்கு கலக்கத்தை கொடுக்க மறுக்கிறது. அதுவே படத்திற்கு சற்று மைனஸ் ஆக அமைந்திருந்தாலும் போகப்போக படத்தின் பிரம்மாண்டமும் மேக்கிங்கும் புதுவித உணர்வை நமக்கு கொடுத்து படத்துடன் ஒன்ற வைத்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது.
அதேபோல் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு கொடுத்த முக்கியத்துவம் போல் வில்லன் மற்றும் அதன் கிராமத்தை சுற்றி இருக்கும் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காததும் சற்றே மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. குறிப்பாக வில்லன் சம்பந்தப்பட்ட அவரது மகன்கள் உட்பட மற்ற கதாபாத்திரங்களில் அதிக தெளிவு இல்லை. அதேபோல் சூர்யா சம்பந்தப்பட்ட அவரை சுற்றியுள்ள கதாபாத்திரங்களுக்கும் பெரிதாக வேலையும் இல்லை. ரோமானிய வீரர்களிடம் எட்டப்பனாக நடித்திருக்கும் போஸ் வெங்கட் வரும் காட்சிகள் கதை ஓட்டத்திற்கு பக்கபலமாக உதவி இருக்கிறது. கதையும் கதாபாத்திரங்களும் இந்த அளவு சிம்பிளாக இருப்பதை தவிர்த்து கடந்த கால காட்சி அமைப்புகளில் ஏகப்பட்ட விஷயங்கள் மூலம் நம்மை பிரமிப்பு ஏற்படுத்தும் படி செய்திருப்பது அவற்றையெல்லாம் ஓரளவு மறுக்கடிக்க செய்து படத்தையும் நம்முடன் சற்றே ஒட்ட வைத்திருப்பது படத்திற்கு பிளஸ் கூட்டி இருக்கிறது.
படத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கின்றனர். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு சர்ப்ரைஸ் நடிகர் என்ட்ரி கொடுத்து தியேட்டரை அதிர செய்கிறார். சூர்யா வழக்கம் போல் தன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் கொடுத்து மீண்டும் ஒரு முறை சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். நிகழ்காலகட்ட காட்சிகளிலும் சரி, முன் ஜென்ம காட்சிகளிலும் சரி மிகச் சிறப்பான நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தி எந்தெந்த நேரத்தில் எந்த அளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டுமோ அதை சிறப்பாக செய்து மீண்டும் ஒருமுறை கவனம் பெற்று இருக்கிறார். வழக்கமான கதாநாயகியாக கல்கி படத்தில் வருவது போல் வந்து செல்கிறார் நடிகை திஷா பதானி. அவருக்கு வழக்கம் போல் பெரிதாக வேலை இல்லை. வழக்கமாக யோகி பாபு செய்வது போல் இந்த படத்திலும் அவர் இருக்கிறார். சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். சிரிப்பு வருகிறதா என்றால் சற்று சந்தேகமே.
எட்டப்பனாக போஸ் வெங்கட் மிளிர்கிறார். கூடவே இருந்து குழி பறிக்கும் கதாபாத்திரத்தில் வழக்கம்போல் சிறப்பாக நடித்திருக்கிறார் நட்டி. மிரட்டல் வில்லனாக வரும் பாபி தியோல் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். இவருக்கும் படத்தில் அதிகமாக வேலை இல்லை. ஆனால் வந்த காட்சிகளை சிறப்பாக செய்திருக்கிறார். சூர்யாவுடன் சிறுவனாக நடித்திருக்கும் சிறுவன் கதைக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கான வேலையையும் நிறைவாக செய்திருக்கிறார். மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் வரும் கருணாஸ் உட்பட பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் அனைவருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கும் பக்கபலமாக அமைந்திருக்கின்றனர்.
படத்தின் இன்னொரு நாயகன் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். பாடல்களை காட்டிலும் பின்னணி இசை மூலம் படத்தை வேறு ஒரு தரத்திற்கு எடுத்துச் சென்று மிரட்டி இருக்கிறார். குறிப்பாக படத்தின் தீம் மியூசிக் வரும் காட்சிகளில் கூஸ் பம்ப்ஸ் மொமென்ட்ஸாக அமைந்திருக்கிறது. வெற்றியின் ஒளிப்பதிவில் இப்படம் உலக தரம். கேமராவை எந்த அளவு சுழற்ற முடியுமோ அந்த அளவு சுழற்றி ஒரு ஹாலிவுட்டிற்கு நிகரான படமாக உருவாக இவரின் பங்கு அளப்பரியது. அதேபோல் கலை இயக்குநரின் பங்கும் மிக மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. ஆர்ட் டைரக்டர் மறைந்த மிலன் சிறப்பான பங்களிப்பை இப்படத்தில் கொடுத்து உலகத்தரம் வாய்ந்த செட்டுகளை நம் கண் முன் கொடுத்திருக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம் ஆகியவை மிகப் பெரிய பிளஸ் ஆக அமைந்து படத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றி ரசிகர்களையும் சீட்டின் நுனியில் உட்கார வைத்து ரசிக்க வைத்து இருக்கிறது. இவை அனைத்தையும் ஒருசேர சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குநர் சிறுத்தை சிவா.
தமிழ் சினிமாவில் இந்த அளவு மூக்கு மேல் விரல் வைக்கும் அளவிற்கு ஒரு மிகப் பிரம்மாண்டமான திரைப்படம் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு சிறப்பான படமாக இந்த கங்குவா அமைந்திருக்கிறது. பார்ப்பவர்களுக்கு காட்சி அமைப்புகள் மூலம் பிரம்மிப்பை ஏற்படுத்தி சிலிர்ப்பை கொடுத்திருக்கும் இந்த கங்குவா கதையிலும், திரைக்கதையிலும் இன்னும் கூட சற்றே கவனம் செலுத்தி இருக்கலாம். மற்றபடி மேக்கிங் மற்றும் பிரம்மாண்டத்துக்காகவே பான் இந்திய படமான கங்குவாவை சென்று காணலாம்.
கங்குவா - பிரமிப்பு!