உத்தர பிரதேசத்தில் 7 வயது சிறுவனின் இடது கண்ணில் தொடர்ந்து நீர் வந்துகொண்டே இருந்துள்ளது. அதனால், சிறுவனின் பெற்றோர் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குச் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கண்ணில் மெல்லிய பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும், அதனை சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம் என்றும் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 12 ஆம் தேதி சிறுவனுக்கு அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது. ஆனால் மருத்துவர்கள் சிறுவனின் இடது கண்ணுக்குப் பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் தவறுதலாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகாரும் அளித்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.