பெங்களுரூவில் லிவ்-இன் உறவில் இருந்த தனது துணையை குக்கரில் அடித்து கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரளா மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவ் (29). அதே கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவா (24) எனும் பெண். இவர்கள் இருவரும் கேரளாவில் ஒரே கல்லூரியில் படித்துள்ளனர். பிறகு பெங்களுரூ கோரமங்களாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் பிரிவில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.
கேரளாவில் இருந்து பெங்களுரூ கோரமங்களாவில் உள்ள நிறுவனத்திற்கு வேலைக்கு வந்த இவர்கள், பெங்களுரூ பேகூர் பகுதியில் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் வீட்டை வாடகைக்கு எடுத்து இரண்டு வருடங்களாக அங்கேயே தங்கியுள்ளனர். பல மாதங்களாக சுமூகமாக சென்று கொண்டிருந்த அவர்கள் உறவில், வைஷ்ணவுக்கு தனது தோழி தேவா வேறு ஒரு ஆணுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் வந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறுகளும் நடந்துள்ளன.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தேவாவுக்கும், வைஷ்ணவுக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தேவாவின் அக்கா கிருஷ்ணா, அவர்கள் இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்து பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார். ஆனால், வீட்டிற்கு வந்த அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை வலுத்துள்ளது.
ஞாயிறு காலை தேவாவின் அக்கா கிருஷ்ணா வெகு நேரமாக தேவாவின் செல்போனில் அழைத்துள்ளார். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. அதேபோல், வைஷ்ணவையும் அழைத்துள்ளார். அவரும் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கிருஷ்ணா நேராக பேகூர் பகுதியில் உள்ள அவர்களின் அப்பார்ட்மெண்ட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு தேவா ரத்த வெள்ளத்தில் கீழே இறந்து கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணா உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்தார்.
அந்தத் தகவலைத் தொடர்ந்து அங்குவந்த போலீஸார் தேவாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பிறகு சம்பவம் குறித்து விசாரித்துள்ளனர். அப்போது மேற்குறிப்பிட்ட விவரங்கள் போலீஸுக்கு தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து போலீஸார் வைஷ்ணவை தேடியபோது அவர் தலைமறைவாகியிருந்தது தெரியவந்தது. பிறகு காவல்துறையின் தீவிர தேடுதலில் வைஷ்ணவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வைஷ்ணவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனக்கும் தேவாவுக்கும் வாய் தகராறு நடந்தது. வாய் தகராறு முற்றி கைகலப்பு ஆனது. ஒரு கட்டத்தில் கோபம் அடைந்து சமையல் குக்கரால் தேவாவின் தலையில் அவர் இறக்கும் வரை கடுமையாக தாக்கினேன் என வைஷ்ணவ் சொன்னதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கைது செய்த வைஷ்ணவ் மீது ஐ.பி.சி. 302ன் படி காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், தொடர்ந்து வைஷ்ணவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.