புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சந்திரசேகர். காங்கிரஸ் பிரமுகரான இவர் கடந்த 23-ந்தேதி தனது மனைவியுடன் சென்ற போது ரவுடி சுகன் தலைமையிலான கும்பல் சந்திரசேகர் மீது வெடிகுண்டு வீசியும், கொடூரமாக வெட்டியும் கொலை செய்தது.
இந்த சம்பவம் குறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் முதல் கட்ட விசாரணையில் சுகன் தலைமையில் 4 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கொலை செய்தது தெரியவந்தது. அதேசமயம் புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் சுகன், காணுவாய்பேட்டை அப்துல் நசீர், மேட்டுப்பாளையம் புளியங்கோட்டை என்கிற ரங்கராஜ் ஆகியோர் கடந்த 24- ம் தேதி சரணடைந்தனர்.
இதனையடுத்து, அவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் சுகன் மற்றும் அவனது கூட்டாளிகளை காலாப்பட்டு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த சோழராஜன் என்பவர் உத்தரவின் பேரில் சந்திரசேகரை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தனர். அதை தொடர்ந்து சோழன் என்கிற சோழராஜனை இன்று தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவனது கூட்டாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சோழன், புதுச்சேரி மாநில பாஜக வர்த்தக அணி தலைவர் ஆவார். மேலும் லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் டாப் டென் ரவுடி பட்டியலிலும் சோழன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.