வெங்காயம் எங்கு விளையுமென ராகுலுக்கு தெரியுமா? என மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மூன்று மசோதாக்களுக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய சட்டத்திற்கு நாடு முழுவதும் விவசாயிகள் மத்திய கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த சட்டத்திற்கு எதிராக ராகுல் காந்தி தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனை விமர்சிக்கும் வகையில் பேசியுள்ள மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், "ராகுல்காந்திக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது. வெங்காயம் மண்ணுக்குக் கீழே விளையுமா அல்லது மண்ணுக்கு மேலே விளையுமா என்பது பற்றிகூட அவருக்குத் தெரியாது. அவர் டிராக்டரின் சோஃபா மேல் உட்கார்ந்துகொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.