கான்பூரில் ரவுடிகளுடன் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், கான்பூர் மாவட்டத்தின் சவுபேபூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட திக்ரு கிராமத்தில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. கொலை, கொள்ளை என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள விகாஸ் துப்பே என்ற அந்த ரவுடியைப் பிடிக்க வெள்ளிக்கிழமை நள்ளிரவு டி.எஸ்.பி. தேவேந்திர மிஸ்ரா, ஆய்வாளர் பில்ஹார், இரு துணை ஆய்வாளர்கள், ஐந்து காவலர்கள் என ஒரு மிகப்பெரிய குழு அந்தக் கிராமத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸார் 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிகாரு கிராமத்தில் அரசு மரியாதைக்காக வைக்கப்பட்டுள்ள உயிரிழந்த காவலர்களின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், "கான்பூர் என்கவுண்டரில், நமது எட்டு போலீஸார் உயிரிழந்தனர், அதேபோல இரண்டு குற்றவாளிகள் இறந்தனர். நமது காவலர்களின் இந்த தியாகம் வீணாகாது. இதற்குக் காரணமானவர்கள் காப்பாற்றப்பட மாட்டார்கள். இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதோடு, ஒரு கோடி ரூபாய் உதவித்தொகையும், குடும்பத்தில் ஒருவருக்குப் பணியும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.