Skip to main content

குடியரசுத் தலைவர் தேர்தல்- எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா! 

Published on 21/06/2022 | Edited on 21/06/2022

 

Yashwant Sinha is the common candidate of the Opposition in the Presidential Election.

 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவிருக்கும் நிலையில், அதற்கான தேர்தல் ஜூலை 18- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், பா.ஜ.க. சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தரப்பில் பொதுவான வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. அதற்கான முன்னெடுப்பை எடுத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கடந்த ஜூன் 15- ஆம் தேதி அன்று டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். 

 

அந்தக் கூட்டத்தில் சரத் பவரை பொது வேட்பாளராக்க அனைத்து கட்சிகளும் விருப்பம் தெரிவித்த நிலையில், அவர் மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மற்றும் காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிட மறுப்பு தெரிவித்துவிட, எதிர்க்கட்சி வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடித்து வந்தது. 

 

இந்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் யஷ்வந்த் சின்ஹா கட்சியிலிருந்து விலகியுள்ளார். இது குறித்து தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள யஷ்வந்த் சின்ஹா, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாகவும் அதைவிட பெரிய தேசப்பணிக்காகவும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காகவும் செயல்படுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந் சின்ஹா தேர்வு செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

 

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்