இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.
பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும்; அதோடு அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. அதில் ஒரு வழக்கு 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருந்தது. மேலும் இந்த விவகாரத்தை விசாரிக்க 6 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது நீதி கேட்டு மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்பொழுது போலீசார் அவர்களைத் தடுத்து கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ள நிலையில், இது குறித்து ராகுல் காந்தி, “முடிசூட்டும் விழா முடிந்ததும், மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கிவிட்டது” என்று மத்திய அரசை காட்டமாக விமர்சித்துள்ளார். இதையடுத்து, “செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதை மல்யுத்த வீரர்களின் கைது சம்பவம் காட்டுகிறது” என்று முதல்வர் ஸ்டாலின் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதேபோன்று இந்திய எதிர்க்கட்சிகள் மற்றும் பல தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மல்யுத்த வீரர் சாக்ஷி மாலிக் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக எம்.பி எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது வழக்குப் பதிவு செய்ய 7 நாட்கள் எடுத்துக் கொண்ட டெல்லி போலீஸ், அமைதியாகப் போராட்டம் நடத்திய எங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய 7 மணி நேரத்தைக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. நாட்டில் சர்வாதிகாரம் ஓங்குகிறதா? இந்திய அரசு தனது விளையாட்டு வீரர்களை எப்படி நடத்துகிறது என்று இந்த உலகம் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.