ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. அம்மாநில ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. அம்மாநிலத்தின் முதல்வராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார். முதல்வர் ஜெகன் பதவியேற்ற நாள் முதல் அரசு நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைளை எடுத்து வருகிறார். அதே போல் மாநிலத்தில் புதிய கட்டமைப்புக்களை உருவாக்கும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதில் ஒரு பகுதியாக முந்தைய ஆட்சிக்காலத்தில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது கட்டப்பட்ட "பிரஜா வேதிகா" இல்லத்தை இடிக்க உத்தரவிட்டார். இந்த கட்டிடம் சுற்றுச்சுழல் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கும் மற்றும் அவரின் குடும்பத்திற்கும் வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை குறைப்பதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் முன்னாள் முதல்வர் என்.சந்திரபாபு நாயுடுவின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை ஆந்திர அரசு குறைக்கிறது என்றும்,
முன்னாள் முதல்வர் என்.சந்திரபாபு நாயுடுவின் மகனும் முன்னாள் முதல்வருமான நாரா லோகேஷுக்கு நான்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை முழுவதும் திரும்ப பெறுவதாக ஆந்திர மாநில அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும் சந்திரபாபு நாயுடுவிற்கு மத்திய அரசு வழங்கிய "Z" பாதுகாப்பு தொடரும் என தெரிவித்துள்ளது.ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தேர்தல் முடிவிற்கு பிறகு தனது குடும்பத்தினருடன் ஐரோப்பா நாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.