Skip to main content

மராத்தியில் பேசாததால் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல்; எல்லை மீறும் தொடர் சம்பவங்கள்!

Published on 08/04/2025 | Edited on 08/04/2025

 

Women attacked by mob for not speaking Marathi in maharashtra

மராத்தி மொழி பேசாததால் இரண்டு பெண்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் டோம்பிவ்லி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் ஒரு கைக்குழந்தையுடன், தாங்கள் வசித்து வந்த வீட்டுவசதி சங்க வளாகத்திற்குள் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது நுழைவுவாயிலில் நின்று கொண்டிருந்த இளைஞரிடம், தள்ளிப்போக சொல்வதற்காக ஆங்கிலத்தில் எக்ஸ்கியூஸ் மீ (Excuse me) என்று அந்த பெண்கள் கூறியுள்ளனர். 

இதில் கோபமடைந்த அந்த நபர், மராத்தி மொழியில் பேச வேண்டும் என்று கோரி அவர்களைத் தாக்கியுள்ளார். மேலும், அந்த நபரின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்கள் மற்றும் 2 இளைஞர்களும் ஒன்று கூடி அந்த பெண்களை அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த பெண்கள் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு, மராத்தியில் பேசவில்லை என்றால் கன்னத்தில் அறையுங்கள் என்று நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே பேசியிருந்தார். அவரது பேச்சு, மகாராஷ்டிராவில்  பேசுபொருளாகியுள்ளது. இதனை தொடர்ந்து, மராத்தி மொழி பேசதாவர்கள் மீது அக்கட்சியினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்